பல மில்லியன் இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. சுகாதாரமான உணவு உண்பதில்லை, அசுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள், நெருக்கமாக அமைந்த சூழல்களில் வாழ்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் அவர்கள் இருதய நோய், தீவிர சுவாசக் கோளாறு நோய்கள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றும் தன்மை அல்லாத நோய்களுக்கு எளிதில் ஆட்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் நோய் பாதிப்பு சுமை கணிசமாக அதிகரிக்கிறது என்று அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக மட்டும் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மரணம் அடைகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுகாதாரமான சூழ்நிலைகள் ஆகியவை அவசியமானவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பும், குழந்தைகள் நலனுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில், சுமார் 3 பில்லியன் பேர், அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் வாழக்கூடிய அவர்களுக்கு “அடிப்படையிலான கை கழுவும் வசதி இல்லை” என்று தெரிய வந்துள்ளது. அதனால் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் தாக்கும்போது லட்சக்கணக்கானோர் இறப்பார்கள் என்ற கவலை ஏற்பட்டது.

“சுகாதார வசதிகள், சுத்தமான சூழல், மற்றும் கழிப்பறை வசதிகள் இந்த நாடுகளில் குறைவாக இருப்பதால், தொற்றும் தன்மை உள்ள நோய்கள் அதிகமாகத் தாக்கும் என்று கருதப்படுகிறது. குறைந்த மற்றும் குறைந்த – நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தால், அது எதிர்பாராத விஷயமாக இருக்காது” என்று சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மன்டே கூறுகிறார்.

உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையிலும், உலக பாதிப்பில் ஆறில் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளது. இருந்தபோதிலும், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் நிகழ்ந்த மரணங்களில் 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணம் அடைவோர் விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது உலக அளவில் மிகவும் குறைந்தபட்ச அளவாகும்.

குறைவான சுகாதார வசதிகள், தூய்மையான குடிநீர் கிடைக்காதது, சுத்தமில்லாத கழிப்பறை சூழல்கள் போன்றவைதான் நிறைய பேரை தீவிர நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்றி இருக்கும் என்று இந்திய அறிவியல் நிபுணர்களின் புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வேறு வகையில் சொல்வதானால், குறைந்த மற்றும் குறைந்த – நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வாழும் மக்கள், குழந்தைப் பருவத்தில் இருந்தே பல்வேறு நோய்க் கிருமிகளுக்கு ஆட்படுகின்ற காரணத்தால், கோவிட்-19 பாதிப்புக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக இருந்திருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இரு ஆய்வுக் கட்டுரைகளுமே இன்னும் திறனாய்வு செய்யப்படவில்லை. இரண்டிலுமே மரண விகிதங்களை ஒப்பிடுவதற்கு, ஒரு பத்து லட்சம் பேரில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறக்கிறார்கள்.

106 நாடுகளில் பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட தகவல்களில், ஒரு டஜன் அம்சங்களின் அடிப்படையில் ஒரு கட்டுரை ஒப்பீடு செய்துள்ளது. நெருக்கமாக வாழ்தல், மக்கள் தொகை, காணப்படும் நோய்கள், கழிப்பறை வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. உயர் வருவாய் உள்ள நாடுகளில் கோவிட்-19 பாதிப்பால் நிறைய பேர் இறந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

“ஏழ்மையான, குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு, பணக்கார நாட்டினரைவிட அதிகமான நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது போலத் தெரிகிறது” என்று ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவரான டாக்டர் மன்டே கூறுகிறார்.

மனிதனின் உடலில் இருக்கும் டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் ஆற்றும் பங்கு குறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒற்றை செல் உயிரிகள் போன்றவை நுண்கிருமிகளில் அடங்கும். அவை செரிமாணத்தில் உதவும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாப்பு தரும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளும், வைட்டமின்களை உற்பத்தி செய்யும்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீண்குமார், பால் சந்தர் ஆகியோர் 122 நாடுகளில் வெளியிடப்பட்ட தகவல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அதில் உயர் வருவாய் மற்றும், நடுத்தர – உயர் வருவாய் பிரிவில் உள்ள 80 நாடுகளும் அடங்கும். பல்வேறு வகையான நுண்கிருமிகளுக்கு, குறிப்பாக “கிராம் நெகடிவ் பாக்டீரியா” எனப்படும் நுண்கிருமிகளுக்கு ஆட்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் குறைவாக இருக்கின்றன என்பது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த பாக்டீரியாக்கள் தான் நிமோனியா, ரத்தக் குழாய், சிறுநீர்ப் பாதை, தோல் தொற்றுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவை. ஆனால் இவைதான் நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடக் கூடிய மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்றும் நம்பப்படுகிறது. நச்சுயிரி பெருக்கத் தடுப்புப் பொருள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்கப்படுகிறது.

மும்பையில் உள்ள தாராவி பகுதி, உலகில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது.

“நுண்ணுயிரிகள் அல்லது சுற்றுச்சூழல் நுண்ணுயிரிக்கு ஆட்படும் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை இதுவரையில் கோவிட்-19 தடுப்பு முன்மாதிரிகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்று டாக்டர் சந்தர் கூறுகிறார்.

இவை அனைத்துமே “தூய்மை குறித்த அனுமானங்கள்” பற்றியதாக இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சுற்றுச்சூழல் அதிக தூய்மையாகும் போது, நோய் எதிர்ப்பு கிருமிகளுக்கு நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் குறைகிறது என்று ‘An Elegant Defense: The Extraordinary New Science of the Immune System’ என்ற நூலின் ஆசிரியர் மாட் ரிச்டெல் கூறுகிறார். “தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துவதால், நோய் எதிர்ப்பு முறைமைகளுக்கு போதிய பயிற்சி கிடைக்காமல் போகிறது” என்கிறார் அவர்.

உண்மையில் இது புதிய சிந்தனை கிடையாது.

தூசிக் காய்ச்சல் குறித்து 1989-ல் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், குழந்தைப் பருவத்தில் இந்த நோய் தாக்குவதற்கான தொடர்பு, அவரின் உடன் பிறந்தவர்களுக்குத் தாக்கும் வாய்ப்பின் தொடர்பு பற்றி தெரிய வந்தது. “அலர்ஜியால் ஏற்படும் நோய்த் தொற்றுகள் குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டத்தில் தடுக்கப்பட்டு, உடன்பிறந்த மூத்தவர்களில் தூய்மை சூழலில் இல்லாதவர்களுக்கு பரவுகின்றன.

அல்லது மூத்த குழந்தைகளிடம் இருந்து, பிரசவத்துக்கு முன் தாயாருக்கு பரவுகிறது’ என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஏழை நாடுகளில் இருந்து பணக்கார நாடுகளுக்கு செல்லும் மக்களால்” அலர்ஜி மற்றும் நோய்த் தடுப்பு சக்தி “அதிகரிக்கிறது” என்று உலக அலர்ஜி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை ரிச்டெல் மேற்கோள்காட்டியுள்ளார்.

“வைரஸ் எதிர்ப்பு சக்தி குறித்த எங்களின் புரிதல்களுக்கு, தூய்மை சூழல் குறித்த அனுமானங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் தடுப்பாற்றல் நிபுணர் ஸ்மிதா ஐயர் கூறியுள்ளார்.

வைரஸ் பாதிப்பில் உலக அளவில் ஏற்பட்ட மரணங்களில் 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

“இருந்தபோதிலும், அடுத்தடுத்து அல்லது திடீரென ஒரே சமயத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரிகள் உருவாகும்போது, ஏற்கெனவே அறியப்பட்ட அல்லது தற்போது பாதித்துள்ள நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடக் கூடிய ஒரு அமைப்பை நம்மால் உருவாக்க முடியும்” என்று ஸ்மிதா கூறுகிறார்.

தொடர்படுத்துதல்கள், காரணங்களைக் கண்டறிவதாக இருக்காது என்பதால், இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளை, படிப்பதற்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். “எதிர்காலத்தில் பெருந்தொற்று பாதிப்புகளைக் கையாள்வதற்கு, பலவீனமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றலாம் என்ற யோசனையை முன்வைக்கும் வகையில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று டாக்டர் மன்டே கூறுகிறார்.

இந்தியா போன்ற நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, இங்கு இளவயது மக்கள் தொகை அதிகம் என்பதும் காரணமாக இருக்கும் என்று தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். முதியவர்கள் தான் இந்த நோயால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். மற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகளால் உருவான நோய் எதிர்ப்பாற்றலும், இப்போது செயல்படுகின்றனவா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். “பெருந்தொற்று ஏற்பட்டு 10 மாதங்கள் தான் ஆகியுள்ளது என்பதால், இந்த வைரஸ் பற்றி நாம் இன்னும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது” என்று பேராசிரியர் குப்பல்லி கூறுகிறார். நமக்கு பல விஷயங்கள் தெரியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version