நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமைச்சரான தகவலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில் அவர், “இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன்.
எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப / அழைப்பு / செய்தி அனுப்ப நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகவும் சிரம் தாழ்ந்து இந்த பணியை ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
தனது புதிய அமைச்சரவையில் ஐந்து பேருக்கு ஜெசிண்டா ஆர்டெர்ன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். பிரியங்கா ராதாகிருஷ்ணன், சென்னையி்ல் பிறந்தவர்.
ஆனால், இவரது குடும்ப பூர்விகம் கேரளா.. மாதவன் பரம்பு ராதாகிருஷ்ணனுக்கும் உஷாவுக்கும் பிறந்த இவர், சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவரது பெற்றோர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர்.
முகமது நபிகளின் உருவத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?
முகமது நபிகளின் உருவத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?
மேல் படிப்புக்காக நியூஸிலாந்துக்குச் சென்ற பிரியங்கா அங்கேயே குடியேறினார். விக்டோரியா பல்கலைக்கழகத்தில் வளர்சித்துறை ஆய்வுப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.
நியூஸிலாந்து தொழிலாளர் கட்சியில் 2006ஆம் ஆண்டில் அவர் சேர்ந்தார். அங்கு பெண் உரிமைகள், குடும்ப வன்முறை, குடியேறி தொழிலாளர்கள் ஆகியோருக்காக குரல் கொடுத்த அவர் தீவிர அரசியலிலும் பங்கெடுத்தார்.
நியூஸிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் பிரியங்கா, தென்னிந்திய பாரம்பரியத்தின் மீது பற்று கொண்டவராகவும் அறியப்படுகிறார்.
2017ஆம் ஆண்டில் தொழிலாளர் கட்சி சார்பில் மவுங்காகேக்கி தொகுதியில் நடந்த எம்.பி தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டு தோல்வியுற்றார்.
எனினும் கட்சி ரீதியிலான பிரதிநிதித்துவம் மூலம் அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார்.
அப்போது அவர் இன விவகாரங்கள் துறையின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு ஆளும் கட்சிக்கும் அரசுத்துறைக்கும் இடையிலான பாலம் போல விளங்கினார்.
சமீபத்தில் நடந்த எம்.பி தேர்தலிலும் அவர் வெற்றியைப் பெறவில்லை. இருந்தபோதும், கட்சி ரீதியிலான தேர்வு மூலம் அவர் எம்.பி ஆக தேர்வாகி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இம்முறை அவரை இன விவகாரங்கள் துறை, இளைஞர் நலன், சமூக நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
பிரியங்காவின் பெயரை அமைச்சரவையில் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டபோது, அரசின் நலனுக்காக கடுமையாக உழைத்தவர் பிரியங்கா என்று ஜெசின்டா ஆர்டெர்ன் புகழாராம் சூட்டினார்.
கேரளாவின் பரவூரை பூர்விகமாகக் கொண்டவர் என்ற வகையில், பிரியங்காவின் புதிய பொறுப்புக்கு கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியூஸிலாந்து அமைச்சராகியிருப்பதற்கு வாழ்த்துகள். இது பெருமைக்குரிய தருணம் என்று கூறியுள்ளார்.
Congratulations to @priyancanzlp on becoming the first NewZealand Cabinet Minister of Indian origin. Keralites taking great pride in this news!https://t.co/nUpRfahYZZ.
— Shashi Tharoor (@ShashiTharoor) November 2, 2020
பிரியங்காவின் புதிய பொறுப்பு குறித்து கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர் மகிழ்ச்சி தெரிவித்து அவருக்கு வாழ்த்துகளை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Congratulations to Priyanka Radhakrishnan, who is given charge for social development, youth welfare and the volunteer sector in the @jacindaardern Cabinet. Priyanka is a native of Paravur, Ernakulam. This is the first time an Indian has become a minister in New Zealand. pic.twitter.com/UbJDQSGAOW
— Shailaja Teacher (@shailajateacher) November 2, 2020