புதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 4 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள ஒரு பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த தொழிலாளர்களின் குழந்தைகளைத் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் வாத்து மேய்க்கும் வேலைக்குக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தைகள் நலக் குழுமத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது அங்குச் சென்று ஆய்வு செய்ததில் கொத்தடிமைகளாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “வாத்து வளர்ப்பு பண்ணையில் சுமார் 7 வயது முதல் 13 வயது வரை ஐந்து சிறுமிகளை வாத்து மேய்க்கக் கொத்தடிமைகளாக வைத்திருந்தனர்.

இந்த சிறுமிகளின் பெற்றோரிடம் ஒரு சிறுமிக்கு ரூபாய் 3000 வீதம் கொடுத்து, இந்த சிறுமிகளை வேலைக்காகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் முதலில் இரண்டு குழந்தைகளை மீட்டோம், பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேலும் மூன்று குழந்தைகளைக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்டோம்.

பின்னர் சிறுமிகள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மீது சட்டவிரோத செயலில் ஈடுபட்டது, இந்த சிறுமிகள் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தது மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது,” என்கிறார்.

முன்னதாக, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜேந்திரன், புதுச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா அவர்களிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மூத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் மேற்பார்வையில் மங்கலம் உதவி ஆய்வாளர் சரண்யா விசாரணை நடத்தி வந்தார்.

காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து சிறுமிகளை மீட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

நடந்தது என்ன?

“ஆரம்பத்தில் இது தொடர்பாகச் சிறுமிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. முதலில் அவர்கள் பாதுகாப்பாக உணரும் சூழல் சமூக ஆர்வலர்கள் மூலம் உருவாக்கி கொடுக்கப்பட்டது. அதன்பின் சிறுமிகளுக்கு ஆலோசனை வழங்கி விசாரித்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்துத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கருவுற்று இருப்பது தெரியவந்தது. மேலும் மற்ற சிறுமிகளின் நிலை மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு தெரியவரும்.

இந்த குற்றச் சம்பவத்தில் சுமார் 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் வாத்து மேய்க்கும் பண்ணையிலே தங்க வைத்துள்ளதால், தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று குழந்தைகள் நலக் குழு தரப்பில் தெரிவித்தனர்.

காவல்துறை சொல்வது என்ன?

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் கேட்டபோது, “இந்த சிறுமிகளின் பெற்றோர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடு மேய்க்கும் வேலைகளை செய்து வந்துள்ளனர்.

தற்போது புதுச்சேரிக்கு வந்த இவர்கள், இவர்களது சிறுமிகளை ஒருவரிடம் வாத்து மேய்க்கும் வேலைக்கு அனுப்பியுள்ளனர். சிறுமிகள் வேலை செய்யும் இடத்தில் உரிமையாளர், அவரது மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலைக்கு வரும் நபர் எனப் பலர் அங்கிருந்த சிறுமிகளை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிகள் இவை அனைத்தும் என்ன என்று தெரியாமலேயே அங்கு இருந்துள்ளனர்.

மேலும் இந்த சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையும் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

இதுவரை இந்த குற்ற வழக்கில் 6 நபர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு நபர்களைத் தேடி வருகிறோம். சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வரும் பட்சத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்,” என்கின்றனர் காவல் துறையினர்.

தற்போது இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version