“புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.”
இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி.
இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் தமக்கேற்ற அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் முன்னெடுப்பார்கள்.
இதனால், தலைவர்களின் ‘தேவை’கள் நிறைவேறும். நாட்டின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கும்.
கடந்த காலங்களிலும் அவ்வாறுதான் நடைபெற்றுவந்திருக்கின்றது.
புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரப்போவதாக இப்போது சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் அதற்கான யோசனைகளையும் கோரியிருக்கின்றது.
இதற்கான நிபுணர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 42 வருட காலத்தில் 20 தடவைகள் திருத்தப்பட்டுவிட்டது.
18, 19, 20 ஆவது திருத்தங்களைப் பார்க்கும் போது ஆட்சியில் உள்ளவர்கள் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதை மட்டும் இலக்காகக்கொண்டே அந்தத் திருத்தங்களைக் கொண்டுவந்திருந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இவற்றைப் பார்க்கும் போது மற்றொரு அரசியலமைப்பைக் கொண்டுவரவேண்டிய தேவை எதுவும் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அவசரமாக 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிய ராஜபக்ஷக்களின் தமது இலக்குகளை அடைந்துவிட்டார்கள்.
ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டைக் குடியுரிமையால் உருவான தடைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சரவை வெறும் ‘ரப்பர் ஸ்ராம்ப்’ என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
19 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷக்களுக்குப் போடப்பட்ட கட்டுக்கள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டுவிடன.
கடந்த நான்கு வருடகால ராஜபக்ஷக்களின் அபிலாஷைகளை 20 ஆவது திருத்தம் தீர்த்துவிட்டது. அவர்கள் எதிர்பர்த்ததும் அதனைத்தான்!
20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் போது பல நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டது. எதிர்க்கட்சி தரப்பிலிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள் ஆவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
பொதுஜன பெரமுனையின் பங்காளிக் கட்சிகள் தரப்பிலிருந்தும், உட்கட்சிக்குள் இருந்தும் உருவான எதிர்ப்புக்கள்தான் ஜனாதிபதிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி சொன்ன விடங்களில் ஒன்றுதான் “புதிய அரசியலமைப்பு” என்பது.
அதாவது, “20 ஆவது திருத்தம் தற்காலிகமானதுதான். உங்களுடைய கருத்துக்களைக் கவனத்தில் எடுத்து புதிய அரசிலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவோம்” என்பதுதான் அவர் சொன்ன சமாதானம். அதன்மூலமாகவே மூன்றில் இரண்டுடன் 20 ஐ நிறைவேற்ற அவரால் முடிந்தது.
‘மொட்டு’ அணியைப் பொறுத்த வரையில் அதன் நிகழ்சி நிரலில் இருந்தது ’20’ மட்டும்தான். அரசங்கத்துக்குள் ஒரு அரசாங்கமாக இருக்கும் ‘வியத்மக’வின் திட்டமும் அதுதான்.
புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவந்து ’20’ இன் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளை விட்டுவிட ‘மொட்டு’ தயாராக இருக்கும் என யாராவது நினைத்தால் அவர்கள் இந்த நாட்டு அரசியலை புரிந்துகொள்ளாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
அல்லது ராஜபக்ஷக்களின் இலக்குகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக இருக்க வேண்டும்.
ஆக, “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் அர்த்முள்ளவையாக இருக்கலாம். சர்வதேசத்தினாலும், அரச சார்பற்ற அமைப்புக்களாலும் வரவேற்கப்படலாம்.
ஆனால், இலங்கையின் அரசியலுக்கு அவை பொருந்தப் போவதில்லை என்பதைக் காலம்தான் உணர்த்த வேண்டியிருக்கும்.