அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களுக்கான ஒரு நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்ட திருத்தங்கள் ஜனவரியில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
நாட்டின் 75 ஆவது வரவு – செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து எமது மக்களை முழுமையாக காப்பாற்றுவதே எமது முக்கிய நோக்கமாக உள்ளது
இறக்குமதி வர்த்தகத்தை விடுத்து முழுமையான விவசாய மற்றும் கமத்தொழில் உற்பத்தியை முதன்மைப்படுத்திய பொருளாதாரமே எமது நோக்கமாகும்.
மக்களை சார்ந்த அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பாகும், கடந்த காலங்களைப் போன்று இல்லாது பொறுப்புக்கூறலுடனும் வீண் விரயமற்ற அரச சேவையை உருவாக்குவோம், அரச சேவையாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம்.
அரச வருமானம் மற்றும் அரச செலவுக்கு இடையிலான நூறுக்கு 7 வீத இடைவெளியை 4 வீதத்திற்கு குறைக்க நடவடிக்கை எடுப்போம்
தேசிய வருமானத்தில் உள்ள 90 வீத அரச கடன்களை 70 வீதமாக குறைக்கவும், சர்வதேச கடன்களை குறைத்துக்கொள்ளவும் கவனம் செலுத்தப்படும்.
வரிக்கொள்கையில் மாற்றமில்லை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டுக்கான வரிக்கொள்கையைப் பின்பற்றி பொருளாதாரத்தை முன்னெடுப்போம். மாதம் 25 மில்லியனுக்கு அதிகமான வியாபாரத்திற்கு 8 வீத வற்வரி அறவிடப்படும்.
பல்வேறு நிறுவனங்களினால் சட்டத் தன்மைகளுக்கு கட்டுப்பட்டு முன்னெடுக்கப்படும், மதுபானம், சிகரெட், சூதாட்டம் என்பவற்றிற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவை வரி அறவிடப்படும்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் திறன்களைக்கூட்டவும், நவீன தொழிநுட்பங்களை பெற்றுக்கொடுக்கவும் இடைக்கால வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும்.
நாட்டின் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படையை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களின் மையமாக இந்த நாட்டினை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்தியாக வேண்டும்.
இந்துசமுத்திரத்தில் எமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
பிரதமரின் வரவு – செலவுத்திட்டம் மீதான உரையின் போது 10 நிமிட இடைவெளியை தரக்கோரி பிரதமர் கேட்டதை அடுத்து 30 நிமிடங்கள் தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்திவைப்பு
முப்படைகளின் அபிவிருத்தி மற்றும் தொழிநுட்ப, அடிப்படை தேவைகள் குறித்த குறுகிய மற்றும் இடைக்கால தேவைக்காக மேலதிகமாக 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.
மக்கள் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் சேவை – இதற்காக 2500 மில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு
டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம். 100 வீத 4G திட்டத்தை முழு நாட்டிற்கும் கொண்டு சேர்ப்பது, இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படும்
சர்வதேச கிரிக்கெட்டிற்காக தகவல் மற்றும் நீவீன தொழிநுட்ப வசதிகள் கொண்ட நவீன விளையாட்டு நகரமொன்றை சூரியவெவ பிரதேசந்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்பிடித்துறையை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றை 2021- 2023 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுப்போம்.
நாட்டின் சீனி உற்பத்தி மற்றும் எத்தனோல் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகளை நீவீனப்படுத்த விசேட திட்டம்
தோட்டத்தொழிலாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2021 ஜனவரி மாதம் முதல் 1000 ரூபா வழங்கப்படும்.