அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து நீங்குவதற்கு இரு மாதங்களே உள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த விரும்பினார் என நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடநத வியாழக்கிழமை நடைபெற்ற முக்கிய அதிகாரிகளுடனான கூட்டத்தின்போது ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ட்ரம்ப் கேட்டார் என அப்பத்திரிகை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானுடனான அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் (202.8 கிலோவிற்கு பதிலாக 2.4 டன்கள்) ஈரான் தற்போது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் இருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கடந்த 12 ஆம் திகதி தெரிவித்தது.
இந்த தகவலையடுத்து, கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இராணுவ தாக்குதல் நடத்த ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட தகவலின், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை செயலாளர், படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மைலி முதலானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீது இராணுவ ரீதியில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டறிந்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் விருப்பத்தால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீதான தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை அடுத்து தனது முடிவில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.