மாவீரர் வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பண்டிதரின் கம்பர்மலை இல்லத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பண்டிதரின் தாயாருடன் இணைந்து அவருக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பில் சுமந்திரனின் முகநூலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“எதிர் வரும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடை செய்யக் கூடாதென போராட்டத்தில் மரித்தவர்களின் உறவுகளால் தாக்கல் செய்யப்பட்ட HCWA 3030/2020 இலக்க எழுத்தாணை விண்ணப்பம் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது தேசிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், இதில் தீர்ப்பிட மாகாண நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருப்பினும் போராட்டத்தில் மரித்தவர்களது உறவினர்கள் தனிப்பட நினைவேந்தும் உரிமை இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் மனுதார்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர்மலையைச் சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி அம்மா 1985 ஜனவரி 9 அன்று பேராட்டத்தில் உயிர் நீத்த தன் மகனான பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனை நினைவு கூர அனுமதி வேண்டும் எனக் கோரியிருந்தார். மகேஸ்வரி அம்மா சார்பாக எம். ஏ. சுமந்திரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

நேற்றைய தீர்ப்பிற்கு அமைவாக இன்று எம். ஏ. சுமந்திரன் மகேஸ்வரி அம்மாவின் வீட்டில், அவரோடு இணைந்து மகனது நினைவேந்தலில் ஈடுபட்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version