நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிவரை  நாட்டில் 391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,162 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 6,010 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு , 14 069 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு நாளொன்றில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இலங்கையில் முதன்முறையாக நேற்று சனிக்கிழமை 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் நாளொன்றில் கூடிய எண்ணிக்கையாக 5 மரணங்களே பதிவாகியிருந்தன.

எனினும் சனிக்கிழமை அந்த எண்ணக்கையைத் தாண்டி 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே இம் மரணங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஒரே நாளில் இவ்வாறு 9 மரணங்கள் பதிவாகிய போதிலும், அவற்றில் 4 மரணங்களே சனிக்கிழமை பதிவானவை என்றும் ஏனையவை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பதிவானவை என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சனியன்று பதிவான 9 மரணங்கள் முழு விபரம்

சனிக்கிழமை பதிவாகிய 9 மரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடன் நியுமோனியா நிலைமையையும் ஏற்பட்டமை குறித்த நபரின் மரணத்திற்கான காரணமாகும்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு என்பவற்றுடன் கொரோனா தொற்றுக்கும் உள்ளானமை இந்நபரின் மரணத்திற்கான காரணமாகும்.

தெமட்டகொடையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுடன் நியுமோனியா நிலை ஏற்பட்டமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இதய பாதிப்பு உயிரிழப்பிற்கான காரணமாகும்.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுடன் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமையாகும்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் ஏற்பட்ட இதய பாதிப்பு மரணத்திற்கான காரணமாகும்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்டமை மற்றும் பற்றீரியா தாக்கமாகும்.

வெல்லம்பிடி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நியுமோனியா நிலைமை தீவிரமடைந்தமை மரணத்திற்கான காரணமாகும்.

76 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுடன் நியுமோனியா நிலைமை ஏற்பட்டமை மரணத்திற்கான காரணமாகும். அதற்கமை நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு குருணாகல் அலுவலக ஊழியர்கள் 14 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இம்மாவட்டத்தில் தபால் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல் மிக்க சூழலுக்கு மத்தியில் இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் நடவக்கைகளும் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதே வேளை கொழும்பில் 4 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹாவில் இரு பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு நாளை முதல் அலுவலக புகையிரதங்களும் சேவையில் ஈடுபடவுள்ளன.

குருணாகலில் தபால் சேவைகள் இடைநிறுத்தம்

குருணாகலில் தபால் சேவைகள் இடைநிறுத்தம் தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இன்று வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

குருணாகல் பிரதேச தபால் அலுவலகம் மற்றும் குருணாகல் பிரதான தபாலகம் என்பவற்றின் 14 ஊழியர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் தபால் மற்றும் மருந்து என்பவற்றை விநியோகிப்பதற்காக தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் என்பவற்றுக்குச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக சுகாதாரத்தரப்பினரின் ஆலோசனைக்கமைய குருணாகல் மாவட்டத்தில் சகல தபால் மற்றும் உப தபாலகங்களின் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருந்து விநியோகிக்கும் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் , வடமேல் மாகாண பிரதான செயலாளர், குருணாகல் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் என்பவர்களுடன் கலந்துரையாடி மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

71 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 920 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று காரணமாக அதிரடிப் படை, சி.ஐ.டி., ரி.ஐ.டி. உள்ளிட்ட 71 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 920 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக புள்ளிவிபரங்கள்  தெரிவிக்கின்றன.

அதில் 361 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் 559 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்ரன.

Share.
Leave A Reply

Exit mobile version