பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோருவதாக, யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
பிரசாத் பெர்னாண்டோ திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன் யாழ். நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமன்றி, பாராமன்றத்தில் கூட பிரசாத் பெர்னாண்டோக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால், இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து, குறித்த இன மக்களின் உணவுப் பழக்க வழக்கம் அல்லது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தால், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்” என அறிவித்தார்.

இதன்போது எழுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, தனது முகக் கவசத்தை அகற்றி தனது முகத்தை முழுமையாக வெளிப்படுத்தி அங்கிருந்த சட்டத்தரணிகளையும் சபையையும் பார்த்து இரு தடவைகள், மன்னித்துக் கொள்ளுங்கள் என மன்னிப்புக் கோரினார்.

Share.
Leave A Reply

Exit mobile version