அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சபை வாக்குகளை பைடன் பெற்றிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றதை இதுநாள் வரை அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் பெரிய மோசடி நடந்து இருப்பதாகவும் அவர் ஆதாரங்களை வழங்காமல் கூறி வருகிறார்.
நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 306 உறுப்பினர்களை பெற்று, தமது முன்னிலையை உறுதி செய்து இருக்கிறது. ஆளும் குடியரசு கட்சியோ 232 உறுப்பினர்களை மட்டுமே பெற்று இருக்கிறது.
வெற்றிக்குத் தேவையான 270 தேர்தல் சபை இடங்களை விட, பைடன் அதிகமாகவே உறுப்பினர்களை வைத்திருக்கிறார். அதே போல, பாப்புலர் வோட் எனப்படும் மக்கள் வாக்குகள் படிப்பார்த்தாலும், டிரம்ப் பெற்றதை விட, பைடன் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை, கூடுதலாகப் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 14ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. அதன் பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பார்.
இதற்கிடையே, டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அதிபர் தேர்தலுக்கு எதிராக, பெரிய மோசடி நடந்தது இருக்கிறது என ஏராளமன வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடைசியாக, அதிகார பரிமாற்றத்துக்கு டொனால்ட் டிரம்ப் சம்மதித்தார். இதனால் பைடன், பல அரசு ரகசிய விவரங்களைப் பெற முடியும், அரசின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்க முடியும். பல மில்லியன் டாலர் நிதியைப் பயன்படுத்த முடியும்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின், கடந்த வியாழக்கிழமைதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் டிரம்ப். அப்போது தேர்தல் நிறைவடைய இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
நீங்கள் எலெக்டோரல் காலேஜ் வாக்குகளில் தோற்றால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “நிச்சயம் வெளியேறுவேன், அது உங்களுக்கே தெரியும். ஒருவேளை, அவர்கள் ஜோ பைடனை தேர்வு செய்து தவறிழைத்தால், நான் எப்போதும் தோல்வியை ஏற்காமல் போகலாம்” என பதிலளித்தார் டிரம்ப்.
“அதை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமானது, காரணம், இந்த தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்து இருப்பது நமக்குத் தெரியும்” எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ஆட்சியை இம்முறை பறிகொடுத்தாலும் மீண்டும் 2024ஆம் ஆண்டில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வாரா போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.
அமெரிக்க தேர்தல் முறையில், வாக்காளர்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்வதில்லை. அதற்கு மாறாக, 538 உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள்.
பொதுவாக, மக்களால் தேர்வு செய்யப்படும் அந்த 538 உறுப்பினர்கள், தங்கள் மாகாணத்தில் கூடுதலாக மக்கள் வாக்குகளைப் பெற்ற கட்சியைச் சேர்ந்த போட்டியாளருக்கே தங்களின் வாக்குகளை அளிப்பார்கள்.
இருப்பினும் சில உறுப்பினர்கள், தங்கள் மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் போகலாம். இதுவரை, எந்த ஒரு தேர்தல் முடிவுகளும் அப்படி மாறியது இல்லை.
வரும் சனிக்கிழமை, குடியரசு கட்சியின் இரண்டு உறுப்பினர்களை ஆதரித்து, முக்கிய தேர்தலுக்கு டிரம்ப் ஜோர்ஜாவில் ஒரு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த முக்கிய தேர்தல், செனட் சபையை எந்த கட்சி கட்டுப்படுத்தும் என்பதை உறுதி செய்யும்.