கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் மற்றும் ராகம போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் ஐந்து போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
சிறைச்சாலைகளில் கோவிட்-19
இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், சிறைச்சாலைகளிலும் தொடர்ச்சியாக கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ இன்று தாண்டியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் இன்றைய தினம் புதிதாக 183 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1091ஆக பதிவாகியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, அங்குள்ள சிறைக் கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
இதையடுத்தே, சிறைச்சாலைக்குள் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சிறை அதிகாரிகளினால் தமது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். இதையடுத்தே, துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.