இலங்கை மஹரசிறைச் சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உடனடியாக சிறைச்சாலை சம்பவம் குறித்து முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பலத்தை பாவித்தது – துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றமை குறித்தும் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடும் நெரிசல் மிகுந்த சிறைகளுக்குள் தாங்கள் எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் ஆபத்து குறித்தும்,தங்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்தும் சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை சிறைச்சாலை சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறைகளில் உள்ள பலர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் நெரிசலை குறைப்பதற்காக பெருமளவு கைதிகளை விடுதலை செய்வது,சிறைச்சாலைகளில் நிலவரத்தை முன்னேற்றகரமானதாக்குவது என்ற தனது அர்ப்பணிப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் அபாயத்தை தவிர்ப்பதற்காக, சிறைச்சாலைகளில் நெரிசலை குறைப்பதற்காக, தங்களின் மனித உரிமைகளை அமைதியான வழியில் பயன்படுத்தியமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையற்ற விதத்திலும் இலங்கை அதிகாரிகள் விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக பொதுமக்களிற்கு அச்சுறுத்தல் அற்றவர்கள் என கருதக்கூடிய கைதிகள் குறித்து சிந்தியுங்கள் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூகத்தில் உள்ளவர்களிற்கு கிடைக்ககூடிய அதே சுகாதார வசதிகள் சிறைகளில் உள்ளவர்களுக்கும் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை கொரோனா வைரஸ் காரணமாக கைதிகளை பார்வையிடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் கைதிகளின் குடும்பத்தவர்கள் கைதிகளுடன் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் சிறையில் உள்ளவர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான பலம் பயன்படுத்தப்பட்டமை இது மூன்றாவது தடவை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.