Site icon ilakkiyainfo

ஜேர்மனியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தாக்குதல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

காரை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர்.காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன.

ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நகரில் பாதசாரிகள் நடமாடும் பகுதியில் வழமையாக நத்தார் சந்தை நடத்தப்படும் இடத்திலேயே சிவிலியன்கள் காரினால் மோதி தாக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை அவசர மீட்பு சேவையினர் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களைக் கேட்டிருக்கும் பொலீஸார், தாக்குதலை எவரேனும் வீடியோ படமாக்கி இருப்பின் அதனை சமூகவலைத் தளங்களில் பகிர்வதைத் தவிர்த்து நேரடியாகத் தம்மிடம் அனுப்பி வைக்குமாறும் அறிவித்திருக்கின்றனர்.

ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் நத்தார் காலப்பகுதியில் இது போன்ற வாகனத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பொலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Exit mobile version