சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசினார். அதன்பின்னர் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ரஜினிக்குத்தான் தெரியும்.
ரஜினி அவருடைய உடல்நிலை பற்றி வெளிப்படையாக சொல்லிவிட்டார். அவரிடம் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிக்கு எள்ளளவும் இல்லை.
அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதனால், மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை இதுவரை சொல்லியிருக்கிறார்.
அதே மாதிரி தன்னுடைய உடல்நலனில் உள்ள பிரச்னைகளையும் மக்களிடம் வெளிப்படுத்தினார் அவ்வளவுதான்.
நான் அவரிடம் என்ன சொன்னேன், பேசினேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை அவருடைய உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.
எதையும் அவர் தான் கூறவேண்டும். அவருடைய உடல் நலன் தான் எனக்கு முக்கியம். அதனால், உங்களுடைய உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் சிந்தியுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன்’ என்று தெரிவித்தார்.