வவுனியாவில், பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்குச் சென்ற மாணவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் காணாமல்போயுள்ளார்.
அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியாவில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதனைப் பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்று வருகின்றனர்
இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த மாணவர் தனது நண்பர்களுடன் இன்று மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீரினுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரைக் கண்டறிய முடியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளால் இளைஞரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே காணாமல் போயுள்ளார்.