ரஜினி வந்துவிட்டார்! இரண்டு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், மூன்றாவது நாளும் மௌனமாக இருந்ததும் இனி அவரை அரசியல் களத்தில் எதிர்பார்க்க முடியாது என்றுதான் பேசப்பட்டது. அந்நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், கட்சி அறிவிப்பை ட்விட்டர் செய்தியாக வெளியிட்டார்.

போயஸ் கார்டன் வீட்டு வாசலில் அதுவொரு வித்தியாசமான நிருபர் சந்திப்பாக அமைந்துவிட்டது. இடது பக்கத்தில் தமிழருவி மணியன், வலது பக்கத்தில் அர்ஜீன மூர்த்தி சகிதம் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கப் போவதை உறுதி செய்ததோடு, பூர்வாங்க பணிகளுக்கான நடவடிக்கைகளை தலைமையேற்று செயல்படப் போகும் நிர்வாகிகளாக இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம் என்று ரஜினி குறிப்பிட்ட ஒரு வரி செய்தியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் தொடர்ந்து பேசுபொருளாகிறது.

ரஜினியின் கட்சி அறிவிப்புக்குக் கிடைத்து வரும் வரவேற்புகளும், விமர்சனங்களும் பொது வெளியில் விவாதங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ரஜினி கட்சிக்கான தேவையும், அவரது செயல்திட்டம், கூட்டணி கணக்குகள், கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து இனி தொடர்ந்து பேசப்படும்.

தமிழகத்தின் இருபெரும் திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் ரஜினியின் அறிவிப்பை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை இந்நேரத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன.

‘அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்’ என்பதே திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. இரு தரப்பிலும் உள்ள சக கூட்டணிக் கட்சிகள் ரஜினியின் அரசியல் கருத்துகளை தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், ரஜினியை அணுகுவதில் இரு கட்சிகளுமே கவனமுடன் இருந்து வந்திருக்கின்றன.

ரஜினியின் கட்சி அறிவிப்பு, திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணியில் உடனடியாக சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக வரவேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டது அதிமுக தரப்பை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து முன்னாள் மேயரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான சைதை துரைசாமி, எம்ஜிஆர் தொண்டர்கள் ரஜினிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று அறிவித்தார்.

எம்ஜிஆர் தொண்டர்கள் ரஜினியின் பக்கம் என்பது ஆச்சர்யமல்ல. 1995ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்தபோதும் இதே சூழல் நிலவியது. ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் எம்ஜிஆர் விசுவாசிகளை ரஜினி பக்கம் கொண்டு வரும் முயற்சிகளில் ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்டவர்கள் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

2018ல் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து, ரஜினிகாந்த் பேசும்போதும் மேடையில் ஏராளமான எம்ஜிஆர் விசுவாசிகள் இருந்தார்கள். ரஜினியால் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும் பேசினார்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் இடங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில் ரஜினி கட்சி அறிவிப்பும் அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி டெல்லி மேலிடமே முடிவு செய்யும் என்று பேசியதும் கூட்டணியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அதிமுக பிரமுகர்கள் குறிப்பிட்டாலும் கூட்டணி குறித்து எழுந்திருக்கும் கேள்விகளை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

எதையும் சமாளிப்பவர் என்று பெயரெடுத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரஜினி அலையை சமாளிக்க முன் வந்திருக்கிறார். ரஜினி முதலில் கட்சி ஆரம்பித்து, பதிவு செய்யட்டும் என்கிறார். ரஜினியின் வாக்குறுதியை கேள்வியெழுப்பி அதன் மூலம் ரஜினி வரமாட்டார் என்னும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்வது முதல்வரின் எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கக்கூடும்.

ரஜினியின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலமாக ரஜினிகாந்த் அலையை கடந்து சென்றுவிடலாம் என்று திமுக தரப்பும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கைகொடுத்த மோடி எதிர்ப்பு அலையை 2021ல் நீட்டிப்பதுடன் அதில் ரஜினி, அதிமுகவையெல்லாம் சிக்கவைப்பதும் அதன் திட்டமாக இருக்கக்கூடும்.

ரஜினியால் திராவிடக் கட்சிகளுக்கு மட்டும்தான் மாற்றாக இருக்க முடியும். ஏதாவது ஒரு தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அவருடைய கட்சி கூட்டணி சேர்ந்தாக வேண்டும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், ரஜினி குறிப்பிடும் மாற்று என்பது அனைத்து கட்சிகளுக்குமான மாற்று. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று கருத்தையொட்டிய நிலைப்பாடு. காங்கிரஸ், பாஜக என இரு தேசியக் கட்சிகளுக்கும் இத்தகைய மாற்றுப் பார்வை இல்லை என்பதை பெருமளவில் தேசியக் கண்ணோட்டம் கொண்ட தமிழ்நாட்டு வாக்காளர்களும் கவனித்து வருகிறார்கள்.

கூட்டணி சேர்வதால் கிடைக்கும் அரசியல் லாபங்களின் அடிப்படையில் பார்க்கும்போதும், பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வரும் தேர்தலில் ரஜினிக்கு உதவியாக இருக்கப்போவதில்லை. மாறாக சுமையாகத்தான் இருப்பார்கள். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று பேசி வந்த தமிழக காங்கிரஸார், கடந்த பத்தாண்டுகளாக அது குறித்து பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் வலுவான கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கடைசி இடம்தான் கிடைத்திருக்கிறது. ரஜினியால் பாஜகவுக்கு பலன் இருந்தாலும் பாஜகவால் ரஜினிக்கு பலன் ஏதுமில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ரஜினி கட்சி கூட்டணி சேருவதற்கு வாய்ப்பில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை காட்சிகள் மாறலாம். ரஜினி கட்சியானது பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியுடனோ கூட்டணி சேரக்கூடும். ஆனால், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறைவு.

ரஜினிகாந்த் என்ன செய்யப் போகிறார்? தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவிப்பாரா? திமுக, அதிமுகவை எதிர்த்து விமர்சனம் செய்வாரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்படுகின்றன. ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது அன்றாட அரசியலில் அங்கமாகிவிட்ட விஷயம். ஒரு டஜன் அரசியல் கட்சிகள் கொண்ட தமிழகத்தில் எல்லா கட்சிகளும் எல்லா பிரச்னைகள் பற்றியும் கருத்து சொல்வதில்லை. ஆளுங்கட்சியின் விளக்கத்தையோ, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையோ ரஜினிகாந்த் பிரதிபலிப்பதால் என்ன பயன்?

விமர்சனங்களோடு தீர்வுகளையும் முன்வைப்பதுதான் அரசியலில் ரஜினி ஸ்டைலாக இருந்து வந்திருக்கிறது. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சி சார்பில் விமர்சனங்கள் செய்ய வேண்டியிருக்கும். கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசித்து ஒவ்வொரு பிரச்னைகளை பற்றியும் விமர்சனங்கள் வரப்போகின்றன.

ஆனால், அவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களிலிருந்து சற்று மாறுபட்டு ஆக்கப்பூர்வ விமர்சனங்களாக, தீர்வுகளை முன்வைக்கும் செயல்திட்டங்களாகத்தான் இருக்கப்போகின்றன. அந்த வித்தியாசத்தை, மாற்றத்தை ரஜினி உறுதி செய்வார்.

2002ல் காவிரி பிரச்னை விஸ்வரூபமெடுத்து, திரையுலகினர் நெய்வேலியில் போராட்டம் நடத்தியபோது ரஜினிக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ரஜினியை கன்னடர், தமிழர் நலனுக்கு எதிரானவர் என்றெல்லாம் சித்தரிக்கப்பட்டபோது, ‘பெங்களூருக்கு போனா என்னை மராத்திக்காரன்னு சொல்றாங்க…பாம்பேவுக்கு போனா என்னை மதராஸின்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல என்னை கன்னடக்காரன்னு சொல்றாங்க’ என்று ஒரே வரியில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு கடந்து போனார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார், ஆனால் பதிவு செய்யப்போவதில்லை. ரஜினிகாந்த் பாஜகவின் முகமாக செயல்படுவார் என்றெல்லாம் விமர்சனங்கள் தொடர்ந்து வரத்தான் செய்யும். அதற்கெல்லாம் விளக்கம் தந்து நேரத்தை வீணடிக்காமல், தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் கடந்து சென்று, அரசியல் மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இருப்பார் என்பது நிச்சயம்.

Share.
Leave A Reply

Exit mobile version