தலித் சாதி ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை தங்கள் குடியிருப்பு வழியாகக் கொண்டு செல்வதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சடலத்தைக் கொண்டு செல்ல வழி இல்லாததால், உறவினர்களின் போராட்டங்களுக்கு நடுவே, அப்பெண்ணின் சடலம் இரவு நேரத்தில் சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சாதி இந்துக்கள் 21 பேர் மீது தாழ்த்தபட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

அவர்கள் கொடுத்த எதிர் புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆயுதங்களைக் கொண்டு கலவரம் செய்தல், தகாத சொற்களை பயன்படுத்துதல், தாக்குதல் நடத்துதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கில் பதியப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர் கண்ணன் என்பவரின் மனைவி நாகலட்சுமி (37) உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

மேலையூர் கிராமத்தில் சாதி இந்துக்கள் மற்றும் தலித் சமூகத்தினருக்கான குடியிருப்புகள் மற்றும் இடுகாடுகள் தனித்தனியாக உள்ளன.

இந்நிலையில், இறந்த நாகலட்சுமியின் உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மழையால் சேதமான பழைய பாதை

தலித் சமூகத்தினர் பயன்படுத்தி வந்த பாதை மழை காரணமாக மோசமாக இருந்ததால், சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தெருவின் வழியாக, இறந்த பெண்ணின் உடலை சனிக்கிழமை மதியம் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலைப் பொதுப் பாலம் வழியாக கொண்டு சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி இந்துக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று போலீஸ் தரப்பிலும், கிராம மக்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்த்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்யத் தனித்தனி சுடுகாடு இருக்கும்போது, சடலங்களை எடுத்துச் செல்லும் பாதைகள் ஏன் தனித்தனியாக இருக்கக்கூடாது என்று சாதி இந்து தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் கேட்டதாக காவல்துறை வட்டாரங்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தன.
இரவு வரை காத்திருந்த சடலம்

மாவட்ட நிர்வாகம் மாற்று வழி அமைத்துத் தருவதாக கூறியுள்ளது.

ஆனால், சாதியைக் காரணமாகக் கூறி தாங்கள் சடலத்தை எடுத்துச் செல்வது தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய தலித் சமூகத்தினர், பொதுப் பாலத்தின் வழியாகத்தான் சடலத்தை எடுத்துச் செல்வோம் என்று கூறி சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.

இதைத் தொடந்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் இரு தரப்பினர் இடையே பேச்சுவாத்தை நடத்தினர்.

எனினும், கால தாமதம் ஆனதாலும், சாதி இந்துக்கள் தொடர்ந்து ஒப்புக்கொள்ள மறுத்ததாலும் இறந்த பெண்ணின் உடல், தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய பாதை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.

அதற்கு முன் உள்ளூர் அதிகாரிகளால், அந்தப் பாதையில் தேங்கி நின்ற மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. இறந்த தலித் பெண்ணின் உடல் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

26 பேர் மீது வழக்கு

இந்த விவகாரம் தொடர்பாக சாதி இந்து தரப்பைச் சேர்ந்த 16 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும், பெயர் வெளியிட விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் ஞாயிறன்று தெரிவித்தார்.

இந்த 16 பேரும் சடலத்தைச் சுமந்து வந்த தலித் தரப்பினரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்றார் அவர்.

திங்களன்று மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித் பெண்ணின் சடலத்தை தங்கள் தெரு வழியாக எடுத்து வரக்கூடாது என்று தடுத்த சாதி இந்து தரப்பினர் அதை தலித் தரப்பிடம் வெளிப்படையாகக் கூறவில்லை என்றும் தலித்துகள் பெண்ணின் சடலத்தை சுமந்து வந்த பொழுது, வழியில் மறிக்கும் வகையில் சாலையில் அமர்ந்து கொண்டதாகவும் அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார்.

சடலத்தோடு காத்திருந்த உறவினர்கள்.

 

“சாதி இந்துக்கள் தங்களது குடியிருப்பு பகுதி வாயிலாக சடலத்தைக் கொண்டு வரக்கூடாது என்று மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிற காரணங்களுக்காக தங்கள் தெரு வழியாக வரக்கூடாது என்று அவர்கள் கூறவில்லை. அது அரசுக்குச் சொந்தமான பொதுப்பாதைதான்,” என்று அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் என்ன சொன்னது?

இது குறித்து தியாகி இமானுவேல் சேகரன் பேரவை ஒன்றிய தலைவர் முனியாண்டியிடம் கேட்ட போது “பொது பாலத்தின் வழியாக உடலை கொண்டு செல்லலாம்.

போலீஸ் பாதுகாப்பு தேவை. எஸ்.பி வந்து கொண்டிருக்கிறார். அதுவரை காத்திருங்கள் என ஆர்.டி.ஓ தெரிவித்தார். பல மணி நேரம் காத்திருந்த பிறகு, எஸ்.பி ரோஹித் நாதன் வந்தார்.

ஏன் இந்த பாலத்தில் வழியாக போக வேண்டும் என சொல்கிறீர்கள் பழைய பாதை வழியாகவே போகலாமே என்று அவர் கேட்டார்” என்று கூறினார் முனியாண்டி,

அதனால் தங்களுக்கும் எஸ்.பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

“ஒரு கட்டத்துக்கு மேல் புதிய பாதை ஒன்று ஏற்பாடு செய்து தருவதாகவும் பாலத்தில் செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது புகார் அளியுங்கள் அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சடலத்தை புதிதாக ஏற்படுத்திய பாதை வழியாக முழங்கால் அளவு தண்ணீரில் உடன் கொண்டு சென்று அடக்கம் செய்தோம். இந்த பிரச்சனைக்கு காரணம் முழுக்க, முழுக்க எஸ்.பி தான். பாலத்தில் செல்ல அனுமதி வழங்காமல் புதிய பாதையில் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தினார். அதனால் புதிய பாதையில் செல்லவேண்டிய தாயிற்று” என்று தெரிவித்தார் அவர்.

இது குறித்து சாதி இந்துக்கள் தரப்பில் பேசிய பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் “எங்கள் பாட்டன் முப்பான் காலத்தில் இருந்து பயன்படுத்தும் பாலம் இது. பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு உடலை இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். எங்கள் மீது தவறு இல்லை,” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version