“எங்கே..எங்கே..உறவுகள் எங்கே?,வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்!”: முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 1,373 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய பன்னாட்டு மனித உரிமை நாளில், தமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிப்பதாக தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில், மனித உரிமைகள் நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள் ,கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாறும், “எங்கே எங்கே உறவுகள் எங்கே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என பல கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினுடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சா்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் யாழ்ப்பாணம் நாவலா் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் கள அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை(10.12.2020) 9 மணி ஆரம்பமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் போராட்டம் சிலமணி நேரங்கள் இடம்பெற்று இறுதியில் குறித்த அலுவலகத்தில் மகஜா் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,
இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனர். இன்றைய குறித்த போராட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனா்.
அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவளித்திருந்தார்.
போராட்டம் இடம்பெற்ற இடத்தில் காவல்துறையினரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘கையில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’: மனித உரிமை தினத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில்…
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை10.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் போர்முடிவுற்று 10 வருடங்கள் கடந்த பின்னரும் கூட இந்த நாட்டில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்றுவரை நீதி கிடைக்கபெறவில்லை.
மக்களின் உரிமைகள் மீறப்பட்ட இந்த நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எதற்காக செயற்படுகின்றது என்று தெரியவில்லை. எமது சிறுவர்கள்,பெண்கள், கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை.
இந்த சம்பவங்கள் சிங்கள மக்களுக்கு மாத்திரமே நாடும் அவர்களுக்காகவே இந்த அரசாங்கமும் என்ற நிலையே தற்போது காணப்படுகின்றது. சுதந்திரமாக நடப்பதற்கு கூட எமக்கு உரிமை இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் இந்த தினத்திலாவது சர்வதேச சமூகம் கண்மூடி இருக்காமல் பாரபட்சமின்றி இந்த அரசுக்கு அழுத்தங்களை வழங்கி எமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே, மறுக்காதே மறுக்காதே எமது உரிமைகளை மறுக்காதே, அரசின் பொறுப்பற்ற பதிலை கண்டிக்கிறோம், என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
மறைக்கப்பட்ட மனிதர்கள் எங்கே – மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதி ஊர்வலம்!
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(வியாழக்கிழமை) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைதி ஊர்வலமானது இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் டெலிகொம் சந்தியில் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ‘மறைக்கப்பட்ட மனிதர்கள் எங்கே’?, இராணுவத்திடம் ஒப்டைக்கப்பட்ட உறவுகள் எங்கே உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியாவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.