உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.

53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் தேவியின் கடைசி மகளான 27 வயதாகும் இந்து, ராகுல் என்பவரை மணந்து கொண்டார்.

“என் இரு மகன்களுக்கும் இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது என் கடைசி மகளும் திருமணம் செய்துகொள்ள, நானும் என் கணவரின் இளைய சகோதரருடன் இணைந்துள்ளேன். என் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என செய்தியாளர்களிடம் பேசிய தேவி தெரிவித்தார்.

இதுகுறித்து இளைய மகள் இந்து கூறுகையில், “என் அம்மாவும் சித்தாப்பாவும் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டனர். தற்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாக” தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version