நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாம் அலையின் பின்னர் மேல் மாகாணம்  அதிக ஆபத்துடைய பகுதியாக காணப்பட்டுள்ள போதிலும், தற்போது அதற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களிலும் கனிசமாளனவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வரை 17 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளார்கள்.

இரண்டாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் மேல் மாகாணம் அபாயமுடையதாகவும் , குறிப்பாக கொழும்பு அதிக அவதானமுடைய பகுதியாகவும் சுகாதார தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கேற்ப ஒக்டோபர் 4 ஆம் திகதி இரண்டாம் அலை உருவானதன் பின்னர் இன்று காலை வரை கொழும்பில் மாத்திரம் 15000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல் கிழக்கின் சில பகுதிகள் முடக்கப்பட்டதையடுத்து , பகல் வேளை முதல் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நசீர்வத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரை 312 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 300 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும் , 12 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இரண்;டாம் அலையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 31 382 ஆக உயர்வடைந்துள்ளதோடு , நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 35 049 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 26 353 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , இன்று மாலை வரை 8925 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 467 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

24 மணித்திலாயங்களில் 17 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரை 17 மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொழும்பில் அதிகளவிலும் , கம்பஹா, கண்டி, களுத்துறை, காலி, நுவரெலியா, அம்பாறை, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 15 000 ஐ கடந்த தொற்றாளர் எண்ணிக்கை

கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி கொவிட் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் பேலியகொடை கொத்தணியின் பின்னர் கம்பஹாவை விட இரு மடங்கு அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஒக்டோபர் 4 முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 15 123 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 309 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். புறக்கோட்டை, கொம்பனிவீதி, கொள்ளுபிட்டி, கிருலப்பனை, வெள்ளவத்தை, பொரளை, தெமட்டகொட, மருதானை, கோட்டை, புளுமென்டல், கிரான்பாஸ், மட்டக்குளி, அங்கொட, அவிசாவளை, பத்தரமுல்ல, தெஹிவளை, ஹங்வெல, ஹோமாகம, களுபோவில, கடுவெல, மாலம்பே, மொரட்டுவை, நுகேகொடை, ஒருகொடாவத்தை, பன்னிபிட்டி, பிலியந்தல, புவக்பிட்டிய, ராஜகிரிய, சலமுல்ல மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் பொரளை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

புதனன்று பதிவான மரணங்கள்

புதனன்று 3 கொரோனா மரணங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த  14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 9 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆணொருவர் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை உறுப்புக்கள் செயல் இழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண்னொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்;துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா , இரத்தம் நஞ்சானமை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழப்பினால்; ஏற்பட்ட அதிர்ச்சி என தெரிவிகப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version