மலேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாகன அணிவகுப்பு முறையில் (Drive-thru) நடந்த  திருமண வரவேற்பு நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

மலேசியாவில் கொரோனா தொற்று குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் அமுலிலுள்ள நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் ஒரு புதுமணத் தம்பதி இந்ந திருமண விழாவை நடத்தியுள்ளனர்.

இத்தனை ஆயிரம் பேர் பங்கேற்றும் அந்த விழா, கொரோனா விதிமுறைகளை மீறவில்லை.

அவர்கள் திருமணத்துக்குச் சென்ற விருந்தினர்கள் அனைவரும் வாகன அணிவகுப்பு முறையில் பங்கேற்றுள்ளனர்.

விருந்தினர்கள், காரை மெதுவாக ஓட்டிச் சென்று மணமக்களுக்குக் கையசைத்து வாழ்த்துக் கூறியுள்ளனர்.

விருந்தாளிகள் இருந்த காரின் ஜன்னல்கள் மூடியிருந்ததால், பாதுகாப்புக் குறித்த அச்சம் ஏதும் எழவில்லை.

மணமகனின் தந்தை அட்னான் ஒரு முன்னாள் அமைச்சராவார். அவர், தமது இல்லத் திருமணத்தில் 10,000 பேர்வரை கலந்துகொண்டதைக் காணும்போது மகிழ்ச்சி ஏற்பட்டாகத் குறிப்பிட்டுள்ளார்.

மணமகனும் மற்றும் அவரின் குடும்பத்தினரும் விதிகளைப் பின்பற்றி, காரைவிட்டு வெளியேறாத விருந்தாளிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

“வாகன அணிவகுப்பு முறை எனது தந்தையின் யோசனையாக இருந்தது. எனது திருமணத்தை புத்ராஜெயாவில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்று அவர் விரும்பினார், ஏனெனில் நான் இங்கு வளர்ந்ததால் அவர்களும் எனது குடும்பம் தான் ” என மணமகன் தெரிவித்துள்ளார்.

மலேசியா தற்போது கொரோனா வைரஸின் புதிய அலைகளை எதிர்த்துப் போராடி வருகிறது. ஒட்டுமொத்தமாக, நாட்டில் கிட்டத்தட்ட 92,000 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். மேலும் 430 க்கும் மேற்பட்டோர் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version