கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன.

பிரிட்டனில் இருந்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பயணிகள் வருகைக்கு 40க்கும் அதிகமான நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், டென்மார்க் நாட்டில் புதிய வகை வைரஸ் திரிபு காணப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்நாட்டுடன் ஆன போக்குவரத்தை ஸ்வீடன் நாடு நிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த புதிய வகை திரிபு, ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக கருதப்பட்டாலும், அது உயிர்க்கொல்லி ஆகும் அளவுக்கு தீவிரமானது என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், புதிய வகை வைரஸ் திரிபுவின் தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு பொதுவெளியில் கருத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த அமைப்பின் அவசரகால விவகாரங்கள் பிரிவு தலைமை அதிகாரி மைக் ரயான், “பெருந்தொற்று காலத்தில் புதி வகை திரிபு கண்டறியப்படுவது வழக்கமானதுதான். நிலைமை இன்னும் கையை மீறிப்போகவில்லை,” என்று தெரிவித்தார்.

ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், “புதிய வகை திரிபு தடையின்றி பரவும் தன்மை வாய்ந்தது,” என கூறியிருந்தார்.

இதேவேளை, தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டனை போலவே வைரஸ் திரிபு தென்படுவதால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

புதிய வகை வைரஸ் திரிபு பரவலை தடுக்கும் நோக்குடன் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடையை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வரும் சரக்குகளுக்கும் இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செளத் பிரிட்டிஷ் துறைமுகமான டோவரில் ஏராளமான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதையடுத்து இரு தரப்பிலும் வர்த்தகத்தை சீராக்க பிரான்ஸ் அதிபருடன் பேசி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் 48 மணி நேர தற்காலிக தடை நிறைவுபெறும்போது அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தெளிவுபடுத்தப்படும் என்று பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சர் கிளெமென்ட் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆலோசனை

புதிய வகை கொரோனா திரிபு பரவல் தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைந்து சீரான முறையில் எடுப்பது தொடர்பாக 27 ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவில் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்படும் பயணிகளை மட்டும் தற்போதைக்கு அனுமதிப்பது குறித்து அந்த நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

இதற்கிடையே, பயோஎன்டெக், ஃபைசர் தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு திங்கட்கிழமை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தடுப்பூசியை போடுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மற்ற நாடுகளில் என்ன நிலைமை?

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் திரிபு பரவலை தடுக்கும் விதமாக அங்கிருந்து பயணிகள் வருகைக்கு இந்தியா, குவைத், கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு புறப்படும் விமானங்களுக்கும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வரும் பயணிகளை மட்டும் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.

செளதி அரேபியா, குவைத், ஓமன் ஆகிய நாடுகள் அவற்றின் எல்லைகளை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முற்றிலுமாக மூடியிருக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version