லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது.
ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச் சற்று நேரம் முன்னராக ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிராங்போர்ட் (Frankfurt) வந்தடைந்த பெண் ஒருவரைப் பரிசோதித்தபோதே அவருக்குப் புதிய வைரஸ் தொற்றியிருந்தமை தெரியவந்துள்ளது.
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட திரிபடைந்த புதிய வைரஸ் அந்தப் பெண் மூலம் ஜேர்மனிக்கும் எட்டியிருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
தொற்றுக்குள்ளான பெண்ணும் விமானநிலையத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்ல வந்த உறவினர்கள் மூவரும் அவர்களது சொந்த இடமாகிய Baden-Wuerttemberg இல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜேர்மனியின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை – ஸ்கன்டிநேவியன் நாடான டென்மார்க்கில் திரிபடைந்த புதிய வைரஸ் ஏற்கனவே 33 பேருக்கு தொற்றியிருக்கிறது.
கடந்த நவம்பர் 14 – டிசெம்பர் 15 காலப்பகுதியில் இத்தொற்றுக்கள் தலைநகரம் உட்பட நாட்டின் பல இடங்களில் கண்டறியப்பட்டன என்பதை டென்மார்க்கின் எஸ்.எஸ்.ஐ. (Danish health institute SSI) உறுதிப்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரிலும் புதிய வைரஸ் தொற்றிய முதல் நோயாளி வியாழனன்று கண்டுபிடிக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.