மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்றைய சந்திப்பு 4 மணித்தியாளங்கள் வரை இடம்பெற்றுள்ளது.

புரிந்துணர்வுடன் இன்றைய உரையாடல் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறுகின்றபோது, இலங்கை விடயத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள 40.1 என்ற தீர்மானம் முடிவுக்கு வர இருக்கிறது.

அது மார்ச் மாதம் 2021ம் ஆண்டு முடிவுக்கு வருவதாக இருந்தாலும்  இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களிற்கு ஒத்துழைக்க மாட்டோம் வெளியேறுகின்றோம் என்று அறிவித்தல் கொடுத்திருக்கின்றார்கள்.

இந்த சூழலில் விசேடமாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்விலே தமிழர் தரப்பிலே ஒன்றிணைந்த ஒற்றுமையான கோரிக்கையில் எதை நாங்கள் வைக்கவேண்டும் என்பது சம்பந்தமாகதான் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இனிமேல் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும்.

என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது. ஆனாலும் இந்த மூன்று தீர்மானங்களும் எமது மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதிலே வெற்றி காணவில்லை.

ஆகையினாலே  இதைவிட வீரியமான செயற்பாடு திறன் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் எல்லோரிடமும் இருக்கின்றது.

அத்தகைய ஒரு கோரிக்கையை சேர்ந்து முன்வைக்க வேண்டும் என்கின் கருத்தும் பொதுவாக இருக்கின்றது.

அதற்கு மாறாக இன்னுமொரு கருத்தும் நிலவியது. ஜெனிவா பேரவையில் இந்த விவகாரம் இருக்குமளவும் இதை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்வது கஷ்டமாக இருக்கும். ஆகையினாலே ஜெனிவாவிலிருந்து இந்த விவகாரத்தை கைவிட்டுவிட வேண்டும்.

எது எப்படியாக இருந்தாலும், அனைத்து தரப்பினுடைய கருத்துக்களையும் செவி மடுத்து விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு விசேடமாக செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை எப்படியானது என்பதை குறித்து தீர்மானங்களை எடுப்பதற்கும், சேர்ந்த கலந்துரையாடுவதற்கும் ஓர் சிறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version