இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார்.
களுத்துறை மாவட்டம் – தெடம்கொட பிரதேச செயலகத்திலுள்ள க்ளோடன் தோட்டத்தின் ஹெதரலியா பிரிவில் இவர் வசித்து வந்தார்.
இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.
உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று 29ஆம் தேதி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவு 7 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.
வேலு பாப்பானியின் தேசிய அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டையில் உள்ள தகவலின் பிரகாரம், அவர் 1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் தேதி பிறந்துள்ளார்.
வேலு பாப்பானி
இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் பிபிசி சிங்கள சேவை, இவர் தொடர்பில் வீடியோ கதை ஒன்றினைய தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் வேலு பாப்பானியை கவனித்து வந்த மஹலெச்சுமி எனும் பெண், அவர் குறித்து பேசியிருந்தார்.
“நான் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து இந்த ஆச்சியம்மா (பாட்டி) பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். எனது மகனை சிறிய வயதிலிருந்து இந்த ஆச்சியம்மாதான் துாக்கி வளர்த்தார். நான் வெளிநாடு சென்ற பின்னரும் எனது பிள்ளையை இவர்தான் கவனித்தார்.
இப்போது வேலு பாப்பானி நம்மிடையே இல்லை. இலங்கை தனது மூத்த பிரஜை ஒருவரை இழந்துள்ளது.