வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்திற்கு முரணான வகையில் உயர்வான நாணயமாற்று வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டமையின் காரணமாக வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார்  நாணயமாற்று நிறுவனமொன்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச்செய்வதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வரையறுக்கப்பட்ட இந்த நாணயமாற்று நிறுவனமானது உயர்வான நாணயமாற்றுவீதத்தைப் பேணுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, இதுகுறித்து மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயமாற்றுப்பிரிவு நேற்று முன்தினம் புதன்கிழமை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இவ்விசாரணைகளின் மூலம் குறித்த நாணயமாற்று நிறுவனம் உயர்வான நாணயமாற்றுவீதத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தமையும், வாடிக்கையாளர்களிடமிருந்து உயர்வான வீதத்திற்கு வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

உரிமம்பெற்ற வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நாணயமாற்று வீதத்தை விடவும் உயர்வான வீதத்திற்குக் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்வதானது 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின்கீழ் அனுமதிபெற்ற நாணயமாற்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை மீறும் செயலாகும்.

எனவே வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின்கீழ் அத்தனியார் நாணயமாற்று நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை நேற்று வியாழக்கிழமை நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக இரத்துச்செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்நிறுவனமானது இனிவருங்காலங்களில் அனுமதியளிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனமாகக் கருதப்படமாட்டாது என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதன் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அந்நிறுவனத்துடன் ஏதேனும் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடுவதானது சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாகக் கருதப்படும்.

அதேவேளை வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு முரணாகச் செயற்படும் நாணயமாற்று நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச்செய்வதற்கோ அல்லது மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கோ மத்திய வங்கி தயாராக இருக்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version