பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

அக்ஷதா ‘பிரிட்டனில் குடியில்லாதவர்’ (non domicile) என அங்கீகரிக்கும்படி கேட்பதற்கு எதிராக வரும் தகவல்கள் அவரின் “நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்” திட்டமிட்டு செய்யப்படுவதாக ரிஷி சுனாக் குற்றம்சாட்டியுள்ளார்.

‘பிரிட்டனில் குடியில்லாதவர்’ என்ற நிலையைக் கோருவதன் மூலம் அவர் தன் வெளிநாட்டு வருமானத்துக்கு பிரிட்டனில் வரி செலுத்த வேண்டியதில்லை.

பிரிட்டன் வரியில், ஆண்டிற்கு 2.1 மில்லியன் பவுண்டு வரி செலுத்தாமல் தவிர்த்திருப்பார் என்று பிபிசி மதிப்பிட்டுள்ளது.

‘பிரிட்டனில் குடியில்லாதவர்’ நிலை என்பது பிரிட்டனில் சட்டப்பூர்வமானது, ஆனால் நிதியமைச்சராக உள்ள ரிஷி சுனாக் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார்.

ஆனால், அவரது மனைவி தனது வரியை குறைத்துக்கட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கும் அளவுக்கான கபடத்தனம் என்று தொழிற்கட்சி கூறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சன் நாளிதழுக்கு சுனாக் கொடுத்த பேட்டியில், எனக்கு எதிராக நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை தாக்குவதற்காக “என் மனைவியை தற்போது குறி வைப்பது ஒரு மோசமான செயல்” என்றார்.

நிதிமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் இம்மாதிரியான தகவல்களை, பிரதமர் அலுவலக ஊழியர்களே ஊடகங்களுக்கு கசியவிடுகிறார்கள் என்ற செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன், பத்திரிக்கையாளர்ளிடம் பேசுகையில், “இம்மாதிரியான சுனாக்கின் நற்பெயரை கெடுக்கும் தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியாவதில்லை.

மேலும் அது எங்கிருந்து வெளியாகிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். ரிஷி சுனாக் முற்றிலும் சிறப்பான வேலையைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

இந்தியாவை சேர்ந்தவர் அக்ஷதா மூர்த்தி. இவரின் தந்தையால் நிறுவப்பட்ட மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸில் இவர் 0.9% பங்குகளை வைத்திருக்கிறார்.

இவரது இந்த பங்குகளின் மதிப்பு மாறிக்கொண்டே இருந்தாலும், அதனி்ன் மதிப்பு 500 மில்லியன் பவுண்டுக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் கடந்த ஆண்டு இவர் 11.6 மில்லியன் பவுண்டுகளை வருடாந்திர ஈவுத்தொகையாக ஈட்டியுள்ளார்.

தமது குடியிருப்போர் அல்லாத நிலையை தக்கவைக்க அக்ஷதா ஆண்டுக்கு 30 ஆயிரம் பவுண்டு செலுத்துகிறார் அக்ஷதா என்ற தகவல் வியாழக்கிழமை வெளியானது.

இதன் மூலம் வெளிநாட்டில் அவர் ஈட்டும் வருமானத்துக்கு பிரிட்டனில் அவர் வரி செலுத்தத் தேவையில்லை.

பிரிட்டன் விதிகளின்படி, பிரிட்டனில் வசிக்கிற ஆனால், தாயகம் திரும்ப விரும்பும் ஒருவருக்கே ‘குடியிருப்போர் அல்லாத நிலை’ வழங்கப்படுகிறது.

 

இது தொடர்பாக சன் நாளிதழிடம் கூறிய ரிஷி சுனாக் தனது மனைவி எந்த விதியையும் மீறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பேசுகையில் எனது மனைவி “பிரிட்டனில் சம்பாதிக்கும் ஒவ்வொரு பென்னிக்கும் (இந்தியாவின் பைசா போல) பிரிட்டனில் வரி செலுத்துகிறார்,

மேலும் சர்வதேச அளவில், அதாவது பிரிட்டனுக்கு வெளியில், எடுத்துக்காட்டாக, இந்தியாவில் அவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு பென்னிக்கும் அங்கு வரி செலுத்தி வருகிறார்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தனது மனைவி “வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்”. இதனால் அவரை இப்படி குற்றம்சாட்டி பேசுவது நியாயமற்றது.” மேலும், “நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி.

அதனால் என்னுடைய கடமைகள் என்னென்ன என்பது எனக்குத் தெரியும்.” தனது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரிட்டனில் வசித்து வருவதாகவும், தனது பெற்றோர்க்கு வயதாகிவிட்டால் அவர்களை பராமரிப்பதற்காக மீண்டும் அவர் இந்திய திரும்பிவிடுவார் என்றும் அவர் கூறினார்.

Rishi Sunak

 

ரிஷி சுனாக்கின் மனைவி தங்களின் அனைத்து வெளிநாட்டு வரிகளையும் இந்தியாவில் அல்லது கேமன் தீவுகள் போன்ற வரி புகலிடங்களில் செலுத்துகிறாரா என்று ரிஷி சுனாக்குக்கு தொழிற்கட்சி கடிதம் எழுதியுள்ளது.

மேலும், அவர்கள், அவர் மனைவியின் வரி ஏற்பாடுகளால் சுனாக் பலன் பெறுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதே போல், தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் கூறுகையில், அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நபர்களின் துணைவர்களுக்கு குடியிருப்போர் அல்லாத நிலையை வழங்கக்கூடாது என்றும் இது விதிகளில் உள்ள ஓட்டை என்றும் தெரிவித்துள்ளனர்.

அக்ஷரா மூர்த்தி எவ்வளவு வரி ஏய்த்தார்?
ஆய்வு: சைமன் ஜேக், வணிகத் துறை ஆசிரியர்

தற்போது அக்ஷதா மூர்த்தி தந்தையின் நிறுவனத்தில் 0.93% பங்குகளின் உரிமைகளை கொண்டுள்ளதால், இதன் மதிப்பு சுமார் 700 மில்லியன் பவுண்டு என்று கருதப்படுகிறது.

இதன் மூலம் அக்ஷதா மூர்த்திக்கு, ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் ஈவுத்தொகை கிடைக்கும்.

பிரிட்டனில் பொதுவாக இத்தகைய ஈவுத்தொகைகளுக்கு சுமார் 39.5% வரி விதிக்கப்படும், ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவத்தின் தலைமையகம் இந்தியாவில் இருப்பதாலும், அக்ஷதா மூர்த்தி இந்திய குடிமகள் என்பதாலும், இந்திய அரசாங்கம் அவருக்கு 20% வரியை விதிக்கும்.

இத்தகைய சூழலில் இரட்டை வரி விதிக்க முடியாது என்பதால், மீதமுள்ள 19.5% வரியை, அதாவது ஒரு ஆண்டுக்கு 2.1 மில்லியன் பவுண்டு வரி கோரும் வாய்ப்பு பிரிட்டன் நிதித்துறைக்கு உள்ளது.

அக்ஷதா மூர்த்தி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறார், எனவே பிரிட்டனில் சுமார் 15 மில்லியன் பவுண்டு வரியைத் தவிர்த்திருப்பார்.

பொதுவாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்போர் அல்லாத நிலை முடிந்து விடும், ஆனால் 1950களில் பிரட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒருவரின் சொத்தின் மீதான வாரிசுரிமை வரி என்று வரும்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் குடியிருப்போர் அல்லாதவராக கருதப்படுவார்.

இந்த ஒப்பந்தம் வாரிசுரிமையில் பெறும் சொத்துக்காக இந்தியர்கள் இரட்டை வரி செலுத்துவதை தடுத்தது.

1980களில், இந்தியா வாரிசுரிமை வரியை ஒழித்தது, ஆனால் இந்த ஒப்பந்தம் ஒருபோதும் மாற்றப்படவில்லை.

அதாவது, அக்ஷதா மூர்த்தி தனது தந்தையின் பல 100 கோடி பவுண்டு சொத்துக்கு வாரிசுரிமை வரி செலுத்த தேவை இல்லை, அதே நேரத்தில் இரட்டை வரி விதிப்பில் இருந்தும் காப்பாற்றப்படுவார்.

ரிஷி சுனாக் அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருந்தாக கூறப்பட்டது குறித்து நிதித்துறை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தவிர கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் உலக அளவில் ஈட்டும் வருமானத்துக்கு அமெரிக்காவில் வரி செலுத்தவேண்டும்.

இந்நிலையில், 2017ல் பிரிட்டன் அரசாங்கத்தில் இணைந்த ரிஷி சுனாக் 2020ல் நிதியமைச்சராக ஆகும் வரை கிரீன் கார்டை ரத்து செய்யவில்லை என்று செய்திகள் வெளியாகின்றன.

ரிஷி சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2001 இல் பட்டம் பெற்றார், பின்னர் 2004 வரை முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாச்ஸில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் 2004 முதல் 2006 வரை கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார், அங்கு சக மாணவி அக்ஷதா மூர்த்தியை சந்தித்துள்ளார்.

பிறகு 2009இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version