குட்டை இன மாடுகளில் தாய்ப்பசு பிரிவில் கேராளாவைச் சேர்ந்த மகாலெட்சுமி என்கிற மாடு ஏற்கெனவே 76 செ.மீ உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. தற்போது எங்களுடைய பசு, 67 செ.மீ உயரம் மட்டுமே இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருகே கட்டியாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்.

கால்நடை வளர்ப்பில் மிகுந்த ஆர்வமுடைய மனோஜ்குமார் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளையும் ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகிறார்.

தற்போது, 67 செ.மீ (சுமார் இரண்டடி) உயரமே உடைய ‘சக்தி’ என்ற பெயரில் தஞ்சாவூர் குட்டை ரக பசு மாடு ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார்.

சக்தி மாடு தற்போது 9 மாத சினையாக இருக்கும் நிலையில், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வளைகாப்பு நடத்த திட்டமிட்டார்.

அதற்காகப் பொங்கல் வைத்து, பழங்கள், சந்தனம், குங்குமம், பூமாலை உள்ளிட்டவைகளால் மாட்டை அலங்கரித்து, மாட்டின் கால்களிலும், கொம்புகளிலும் வளையல், ஆபரணங்களை அணிவித்து ஆரத்தி எடுத்து பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி நெகிழவைத்துள்ளனர் குடும்பத்தினர்.

மனோஜ்குமார் வளர்க்கும் இந்த பசு மாடு 67 செ.மீ உயரம் மட்டுமே உள்ளதால், தாய்ப்பசு பிரிவில் இந்த மாட்டை கின்னஸ் சாதனைக்காக மனோஜ்குமார் விண்ணப்பித்துள்ளார்.

குட்டை மாட்டுடன் மனோஜ்குமார்

இதுகுறித்து மனோஜ்குமாரிடம் பேசினோம்,

“படிக்கிற காலத்துல இருந்தே மாடுகள் வளர்க்கிறது ரொம்பவே பிடிக்கும். அப்ப தாத்தா பாட்டி வீட்டுல அதிகமா மாடுகள் இருக்கும்.

இப்போ 10 வருஷமா தனியா மாடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கேன். 10 வருஷமா தஞ்சாவூர் குட்டை இன பசு மாடுகளாக வாங்கி வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

கன்று ஈன்றதுக்கு அப்புறமோ, யாராவது ரொம்ப விருப்பப்பட்டு கேட்டாலோ கொடுத்திட்டு, அடுத்த குட்டை ரக மாட்டை வாங்கிட்டு வந்திடுவேன்.

அப்படி ஏற்கெனவே இருந்த ஒரு பசுவைக் கொடுத்ததுக்கு அப்புறம், காரைக்குடி பக்கத்துல இருக்க பள்ளத்தூர்ல இருந்துதான் இந்த குட்டை பசு மாட்டை வாங்கிட்டு வந்தேன்.

நான் வாங்கிட்டு வரும்போது 3 வயசு இருக்கும். வாங்கி வந்து இப்போ ஒன்றரை வருஷமாகுது. தூத்துக்குடி அமிர்தம் ஒருங்கிணைந்த பண்ணையில் ராஜேஷ் என்பவருடைய காளையோட இணை சேர்த்தோம். அதன்பிறகு சினையாகி இப்போ 9 மாதங்கள் ஆகி இருக்கு.

இந்த பசு மாட்டோடு, ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்திட்டு வர்றேன். பொதுவாகவே எங்க வீட்டுல யாருக்கும் மாடு வளர்ப்பு பெருசா பிடிக்காது.

தனியாகவோ, நண்பர்கள் வீட்டிலோ வச்சு தான் வளர்த்துக்கிட்டு இருந்தேன். இந்த குட்டை மாட்டை வாங்கிட்டு வந்ததுகப்புறம் எல்லாருக்கும் பிடிச்சிப்போச்சு.

எங்கம்மா இந்த மாட்டை மகளாகவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சக்தி குட்டை மாடு வந்ததுகப்புறம் வீட்டுலயே வச்சி வளர்க்க ஆரம்பிச்சேன்.

எங்க வீட்டுக்குள்ள எங்களோடே தான் இருக்கும். பிள்ளை மாதிரி வளர்த்திட்டோம். அதனால, வளைகாப்பு நடத்தலாம்னு அம்மாதான் சொன்னாங்க. இன்னைக்கு சிறப்பா வளைகாப்பு நடத்தி முடிச்சிருக்கோம்.

இந்த குட்டை ரக மாட்டுக்கு தீவனச் செலவு ரொம்பவே குறைவு. பலரும் இந்த ரக மாட்டுல பால் குறைவா கிடைக்கும்னு நினைக்கிறாங்க.


குட்டை மாட்டுக்கு வளைகாப்பு

ஏற்கெனவே நான் வளர்த்த குட்டை ரக மாட்டிலேயே தினமும் ரெண்டு லிட்டர் வரைக்கும் பால் கறந்திருக்கிறேன்.

சக்தியும் கணிசமான பால் கொடுக்கும். இப்ப பலரும் என்னோட ‘சக்தி’யை விலைக்குக் கேட்கிறாங்க.

அதோட காலம் வரைக்கும் வச்சிக்கணும். எவ்வளவு விலை கொடுத்தாலும், கொடுக்கவே கூடாதுன்னு வைராக்கியத்துல இருக்கோம். அதற்கேற்ப, சக்தி விரைவிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கு.

குட்டை இன மாடுகளில் தாய்ப்பசு பிரிவில் கேராளாவைச் சேர்ந்த மகாலெட்சுமி என்கிற மாடு ஏற்கெனவே 76 செ.மீ உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.

தற்போது எங்களுடைய பசு, 67 செ.மீ உயரம் மட்டுமே இருக்கிறது. எனவே தாய்ப்பசு பிரிவில் எங்களுடைய பசுவை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம்.

கன்று ஈன்றபிறகு, சாதனை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கும் என்று காத்திருக்கிறோம்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version