அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிய நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின், பாதுகாப்பு ஆலோசகர்களை அவசரமாகச் சந்தித்திருந்தார் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் செயற்படும் அவர், வெளிநாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழலில் இராணுவம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
நாட்டின் அரசியலமைப்புக்கு முப்படைகளும் கட்டுப்பட்டு செயற்படும் என்றும், இராணுவமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றும், அவர் வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களிடம் உறுதியளித்திருக்கிறார்.
இராணுவம் ஒரு தொழில்முறை அணி என்ற வகையில், அரசுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளதாகவும், ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும் நிலையில், இராணுவம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி பலருக்கு காணப்பட்டது.
இது இராணுவ ஆட்சி ஒன்றுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் பலராலும் எழுப்பப்பட்டது. குறிப்பாக, அரசாங்கத்துக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனநாயகப் போராட்டங்களில் வன்முறை ஏற்படும் போது இராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளதாக கூறியிருந்தார்.
அதனால் தான், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்படுகின்ற போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு, முதலில் பொலிஸாருக்கு வழங்கப்படும்.
அவர்களால் இயலாத நிலையில் தான், இராணுவம் அழைக்கப்படும். பொது ஒழுங்குகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படைகள் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவமும் இப்போது பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.
கட்டுப்படுத்த முடியாதளவுக்கு போராட்டங்கள் ஏற்படுகின்ற போது, அரசு நிர்வாகம் செயலிழக்கின்ற போது, இராணுவம் அமைதியாக இருக்காது. ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டது போன்று, அரசாங்கத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அது எடுக்கும்.
அரசியல் ரீதியாக இராணுவம் தலையீடுகளை மேற்கொண்ட எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறி விட்டது, ஜனநாயகத்தை காப்பாற்றத் தவறி விட்டது என்று கூறப்படுவது உலக வழமை.
மியான்மார் இராணுவமும் அவ்வாறு தான் கூறியது. தாய்லாந்து இராணுவமும் அவ்வாறே கூறியது. பாகிஸ்தான் இராணுவமும் அதனைத் தான் குறிப்பிட்டது.
இராணுவ ஆட்சியை எதிர்கொண்ட எல்லா நாடுகளிலும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய போது, அரசியல் தோல்வி, பொருளாதார தோல்வி, பாதுகாப்புத் தோல்வி போன்ற காரணங்கள் தான் கூறப்பட்டன.
தாங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தப் போவதாகவும், தேர்தலை நடத்தி, பாராளுமன்றிடம் ஆட்சியை ஒப்படைக்கப் போவதாகவும் தான் கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த இராணுவ ஆட்சியாளரும் நடந்து கொண்டதில்லை.
இரண்டாவது நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது, மூன்றாவது, பிரதமர் பதவியில் இருந்து விலகுதல்.
அதில் முதலாவது தெரிவை கையில் எடுத்த இம்ரான் கான், பின்னர், எல்லாத் தெரிவுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு உள்ளானார்.
இலங்கையைப் பொறுத்தவரையில், இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டது குறைவு. ஆனாலும், 1960களில் இரண்டு முறை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1962 இல் கேணல் சேரம் தலைமையில், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது. அப்போது சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சியில் இருந்தார்.
அதுபோல, 1966ஆம் ஆண்டில், டட்லி சேனநாயக்க ஆட்சியில் இருந்த போது, இன்னொரு இராணுவப் புரட்சிக்குத் திட்டமிடப்பட்டது.
இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் றிச்சர்ட் உடுகம மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
ஆயினும், 2010 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவருக்கு நெருக்கமான படை அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் தவிர இலங்கையில் இராணுவம் சார்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை.
ஆனால், இலங்கையின் படையமைப்பின் திடீர் வீக்கம் அவ்வாறானதொரு நிலையை உருவாக்கலாம் என்ற அச்சம், எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்தது.
தற்போதைய நிலையில், வெளிநாடுகள் மத்தியிலும், உள்நாட்டில் மக்கள் மத்தியிலும் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுமா என்ற அச்சமும், கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது.
1960களில், ஆட்சியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சரி, டட்லி சேனநாயக்கவும் சரி முழு நேர அரசியல்வாதிகளாகவே இருந்தவர்கள். அவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு இருக்கவில்லை.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அவர், இலங்கை இராணுவத்தின் அதிகாரியாக பணியாற்றியவர். போரின் இறுதிக் காலகட்டங்களில், பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தவர்.
இதன் மூலம், அவருக்கும் இராணுவத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இந்த நெருக்கமான உறவு, அரசாங்கத்துக்கு எதிராக இராணுவத்தின் திரட்சிக்கான வாய்ப்புகளை அருகச் செய்கிறது.
அதுபோலவே, பொது பாதுகாப்பு அமைச்சராக றியர் அட்மிரல் சரத் வீரசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலராக ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின்
செயலராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் என்று ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி, பாதுகாப்புத் துறையில் இருந்து ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது.
அதுபோலவே, தன்னைச் சுற்றி முக்கிய பதவிகளில் அவர் இராணுவ அதிகாரிகளைத் தான் நியமித்திருக்கிறார். இந்தப் பாதுகாப்பு வளையம், கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தேவையான பலத்தைக் கொடுத்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், அவர் இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் தலையிடும் என்ற அச்சத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் சர்வதேச சமூகத்துக்கு உள்ள சிக்கல், அரசாங்கம் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அதனைப் பாதுகாக்க இராணுவம் எவ்வாறு செயற்படும் என்பது தான்.
ஜெனரல் சவேந்திர சில்வா, அரசியலமைப்புப்படி இராணுவம் செயற்படும் என்று உறுதியளித்திருக்கிறார். அத்துடன் அரசாங்கத்தைப் பாதுகாக்கவும், இராணுவம் தனது கடமைகளை ஆற்றும் என்றும் கூறியிருக்கிறார்.
அரசுக்கு எதிராக மக்கள் போராடுகின்ற போது, அரசாங்கத்தை இராணுவம் பாதுகாக்க முற்படுகின்ற போது தான் சிக்கலானதொரு நிலை ஏற்படும். கோட்டாபய ராஜபக்ஷ எந்த தருணம் வரை பதவியில் இருக்க நினைத்திருக்கிறாரோ, அந்த தருணம் வரை அவரால் இராணுவத்தின் பாதுகாப்பை பெற முடியும்.
அவ்வாறு பெற முனையும் போது, ஏற்படக் கூடிய முரண்பாடு தான், அச்சத்துக்குரியது. அரசாங்கத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் இராணுவம் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க முனைந்தால், அது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசியல் ரீதியாக இராணுவம் செயற்படும் வாய்ப்புக் குறைவாகவே இருந்தாலும் அரசியல்வாதிகளைப் பாதுகாக்க அது முற்படும் போது, அதன் விளைவுகள் பாரதூரமானதாகவே இருக்கும்.
https://www.virakesari.lk/article/125636