p>காலி, தொடந்துவ பகுதிக்கு அப்பால் உள்ள ஆழ் கடற் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 620 கோடி ரூபா வரை பெறுமதியான 300 கிலோ ஹெரோயின் மற்றும் 25 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில்  கடற்பரப்பில் வைத்து 6 சந்தேக நபர்களும் கரைப் பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களுமாக 11 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

 

திங்கட்கிழமை (11) மாலை இந்த  சுற்றி வலைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அரச உளவுச் சேவை வழங்கிய  சிறப்பு தகவலுக்கு அமைய, கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

 

உளவுத் தகவலுக்கு அமைய, தென் சர்வதேச கடற்பரப்பிலும் தேசிய கடற்பரப்பிலும், கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு படையினரும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுடன்  இணைந்து தொடர்ச்சியாக  கண்காணிப்பு பணிகளில் கடந்த 2 வாரங்களாக ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று (12) காலி,  தொடந்துவ பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில்,  நாட்டின் கரையை நோக்கி பயணித்த சந்தேகத்துக்கு இடமான  மீன் பிடி படகொன்றினை கடற்படையினர் தலைமையிலான சிறப்புக் குழு சோதனையிட்டுள்ளது.

இதன்போது அந்த மீன் பிடி படகில் சூட்சுமமாக 13 உரப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ ஹெரோயின் மற்றும் 25 கிலோ ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள்னர்.

முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் பிரகாரம், இந்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய  டிங்கிப் படகொன்று, கெப் வாகனமொன்று,  முச்சக்கர வண்டி ஒன்றுடன் மேலும் ஐவர் கரைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இதுவரையிலான விசாரணைகளின் பிரகாரம், போதைப் பொருட்களுடன் சிக்கிய மீன் பிடி படகு, கடந்த 2022 மார்ச் 26 ஆம் திகதி பேருவளை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளுக்கு செல்வதைப் போன்று சர்வதேச  கடற்பரப்புக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி சர்வதேச கடற்பரப்பில் வைத்து சர்வதேச கடத்தல்காரர்களிடம் இருந்து போதைப் பொருளினைப் பெற்று  நாட்டுக்கு திரும்பும் போது இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறும் கடற்படையினர்,  அவர்கள்  ஹிக்கடுவை, பூசா, கலவானை,  பெரில்லவத்தை,  மொரகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் ஆலோசனைக்கு அமைய சிறப்புக் குழுவொன்று ஆரம்பித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version