தடைவிதிக்கப்பட்ட சுமார் ஒரு டஜன் ரஷ்யர்களுக்கு பிரிட்டனில் சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள (சுமார் 8 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்க்கு சமம்) சொத்துக்களுடன் தொடர்பு உள்ளதாக பிபிசியின் ஆய்வு தெரிவிக்கிறது.

பிரிட்டனின் தெற்கில் உள்ள பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கன்ட்ரி மேனர்கள் மற்றும் லண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் உள்ள சொகுசு குடியிருப்புகள் ஆகியவை விளாதிமிர் புதினுடன் நெருக்கமானவர்களுக்கு சொந்தமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சில தனிநபர்கள் இந்த மாளிகைகள் தங்களுக்கு சொந்தமில்லை என்று கூறுகிறார்கள். அதாவது அவர்கள் தடைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அர்த்தமாகிறது.

யாருக்கு எது சொந்தமானது என்பதை அறிய, கசிந்த வெளிநாட்டு ஆவணங்கள், நிலப் பதிவேடுகள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றுடன் கூடவே முந்தைய செய்தி அறிக்கைகளின் விரிவான ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம்.

ரஷ்யப் பெருமுதலாளிகளுக்கு வீடு அமைப்பதற்கான இடமாக பிரிட்டன் திகழ்வதை எங்கள் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

 மேலும் வரி புகலிடங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கிய சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்களை கண்டறிவதில் உள்ள சிரமங்களையும் எடுத்துக்காட்டுகின்றன.

பிபிசியின் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஊழலுக்கு எதிரான குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்( anti-corruption group, Transparency International) பிரிட்டனில் எது யாருக்குச்சொந்தமானது என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறுகிறது.

“பிரிட்டனில் உள்ள ரகசிய அமைப்பு முறை மற்றும் வெளிநாட்டு சார்புகள் காரணமாக மக்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் நிதிகளை பிரிட்டனில் மறைப்பது மிகவும் எளிதானது.

மேலும் அந்த சொத்துக்கள் எங்குள்ளது என்பது போலீஸாருக்கு தெரிந்திருக்கும் என்று கூட சொல்லமுடியாது,” என்று இந்த அமைப்பின் தலைமை வழக்கறிஞர் ரேச்சல் டேவிஸ் பிபிசியிடம் கூறினார்.

ரஷ்ய அதிபர் மாளிகைக்கு நெருக்கமாகக் கருதப்படும் பெருமுதலாளிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கூட்டாக தடைகள் விதித்துள்ளன.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான பெருமுதலாளிகள் மீது, பிப்ரவரியில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் சிலர் ஏற்கனவே அரசின் தடை பட்டியலில் இருந்தனர்.

தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்யர்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் பின்வருமாறு:

  • செல்ஸீ உரிமையாளர் ரோமன் அப்ரமோவிக்கின் 230 மில்லியன் டாலர் சொத்துகள்
  • சுருட்டு அறை மற்றும் பாதாள மது அறைக்கு திட்ட அனுமதியுடன் கூடிய வடக்கு லண்டனில் 65 மில்லியன் டாலர் விக்டோரியன் மாளிகை
  • விளாதிமிர் புதினின் முன்னாள் ஜூடோ எதிரணி பார்ட்னர் சம்பந்தப்பட்ட, ஒரு சட்டப் பிரச்சனையில் இருக்கும் சர்ரே மேனர் ஹவுஸ்

மார்ச் மாத தொடக்கத்தில், 55 வயதான பில்லியனர் மீது பிரிட்டிஷ் அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. முந்தைய வாரம் திரு அப்ரமோவிக் செல்ஸீ எஃப்சியை விற்பனைக்கு அறிவித்திருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள ஃபுல்ஹாம் சாலையில் 50க்கும் மேற்பட்ட சொகுசு குடியிருப்புகளுடன் பிரிட்டனில் அவருக்கு விரிவான சொத்து போர்ட்ஃபோலியோ உள்ளது.

அவரது பிரிட்டிஷ் நிறுவனமான Fordstam லிமிடெட் மூலம், அவர் செல்சியா கிராமத்தில் டஜன் கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் செல்சியாவின் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல் மற்றும் குடியிருப்பு வளாகங்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்று நிலப் பதிவேடு தெரிவிக்கிறது.

அவரது மிகவும் விலையுயர்ந்த லண்டன் சொத்து பில்லியனர்ஸ் ரோ என்று செல்லப்பெயர் பெற்ற தெருவில் உள்ள 15 படுக்கையறைகள் கொண்ட மாளிகை ஆகும்.

இந்தத்தெருவில் இருக்கும் ஸ்டக்கோ பூச்சு கொண்ட இத்தாலிய மாளிகைகளில், அரச பரம்பரையினர், தூதர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் வசிக்கின்றனர்.

அப்ரமோவிக் 2011 ஆம் ஆண்டில் ஒரு ஆஃப்ஷோர் நிறுவனத்தைப் பயன்படுத்தி மேற்கு லண்டனில் உள்ள சொத்தை £90 மில்லியன் செலுத்தி வாங்கினார்.

2016 ஆம் ஆண்டில், நிலத்தடி நீச்சல் குளம் உட்பட, 28 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் புதுப்பிப்பதற்கான திட்டமிடல் அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் ஆவணங்களில், அதன் தற்போதைய குளம், ” மிகவும் சிறியது, மோசமான நிலையில் உள்ளது மற்றும் வசதியான அல்லது அர்த்தமுள்ள நீச்சல் அனுபவத்தை அளிப்பதற்கு போதுமானதாக இல்லை,” என்று விவரிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், அப்ரமோவிக் 8.7 மில்லியன் பவுண்டுகளுக்கு கிங்ஸ் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க Fordstam Limitedஐப் பயன்படுத்தினார்.

2019 ஆம் ஆண்டில், செல்சீயில் உள்ள முன்னாள் லாட்ஸ் ரோடு மின் நிலைய நிலத்தில் மூன்று மாடி பென்ட்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பிற்கு 22.3 மில்லியன் பவுன்டுகள் செலுத்தினார்.

பதில் கோரி பிபிசி செய்த அழைப்புகளுக்கு அப்ரமோவிக் பதிலளிக்கவில்லை.

இந்த ரஷ்ய பெருமுதலாளியின் ” ரஷ்ய அதிபர் மாளிகையுடனான நெருங்கிய தொடர்புகளை” மேற்கோள் காட்டி, பிரிடிஷ் அரசு மார்ச் 3 ஆம் தேதி அலிஷர் உஸ்மனோவ் மீது முழு சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைக்கு உத்தரவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து இது வந்தது.

உஸ்பெகிஸ்தானில் பிறந்த தொழிலதிபரும் முன்னாள் ஆர்செனல் பங்குதாரருமான இவர் எவர்டனின் பெரும்பான்மை பங்குதாரரான ஃபர்ஹாத் மோஷிரியின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

மோஷிரி, உஸ்மனோவின் யுஎஸ்எம் ஹோல்டிங்ஸின் தலைவராக உள்ளார். பயிற்சி மைதானத்திற்கு USM இன் ஸ்பான்சர்ஷிப் உட்பட உஸ்மானோவின் வணிக நிறுவனங்களுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் எவர்டன் இடைநிறுத்தியுள்ளது.

“ஹைகேட்டில் [வடக்கு லண்டன்] உள்ள பீச்வுட் ஹவுஸ் மற்றும் சர்ரேயில் உள்ள 16வது நூற்றாண்டு சுட்டன் பிளேஸ் தோட்டம்” உட்பட அவரது சொத்து 18.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரிடிஷ் அரசு கூறியது.

கோடீஸ்வரரின் பெரும்பாலான பிரிடிஷ் சொத்துக்கள் மற்றும் 600 மில்லியன் டாலர் சொகுசு கப்பல் ஏற்கனவே “மீட்க முடியாத அறக்கட்டளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று உஸ்மனோவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இது தடைகளுக்கு அப்பாற்பட்டது.

பிரிடிஷ் அரசால் குறிவைக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சமீப காலம் வரை, இறுதி உரிமையாளரை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லாத

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களில் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் சிக்கலான வலை மூலம் அவை வைக்கப்பட்டுள்ளன.

Beechwood House, London

உஸ்மனோவ் 2008 இல் பீச்வுட் ஹவுஸை ஒரு வெளிநாட்டு நிறுவனம் மூலமாக 48 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கினார்.

இன்டர்நேஷனல் கன்சோர்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்ஸ் உடனான விசாரணையின் ஒரு பகுதியாக, சைப்ரஸில் உள்ள இரண்டு நிறுவனங்கள் மூலம் சுட்டன் பிளேஸுக்கு பகுதி-நிதி பேமெண்டுகளுக்காக உஸ்மனோவ் 2005 ஆம் ஆண்டில் இதை அடமானம் வைத்திருந்ததைக் காட்டும் ஆவணத்தை பிபிசி பார்த்தது.

அவரது இரண்டு மருமகன்களும் வடக்கு லண்டனில் பல மில்லியன் பவுண்டு சொத்துக்களை வைத்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசு ஒலெக் டெரிபஸ்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த போது, அவரை 2 பில்லியன் பவுண்டு மதிப்பு மிக்கவர் என்றும், ரோமன் அப்ரமோவிக்கின் “முன்னாள் வணிக பங்குதாரர்” என்றும் விவரித்தது.

மார்ச் மாத தொடக்கத்தில், சர்ரே, வெய்பிரிட்ஜில் உள்ள ஆர்ட் டெகோ மேன்ஷன் ஹாம்ஸ்டோன் ஹவுஸ் உட்பட, அவர் பிரிட்டனில் பல மில்லியன் பவுண்டுகள் சொத்துகள் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, கிரேடு II பட்டியலிடப்பட்ட சொத்து, 2001 இல் சைப்ரஸை தளமாகக் கொண்ட ஈடன்ஃபீல்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் 7.1 மில்லியன் பவுண்டுக்கு கையகப்படுத்தப்பட்டது.

டெரிபஸ்கா பெல்கிரேவ் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பெரிய வீட்டையும் வைத்திருக்கிறார். இருப்பினும், சொத்து குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று அந்த நேரத்தில் கோடீஸ்வரரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் டெரிபஸ்காவுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த வீட்டை 2004 ஆம் ஆண்டில் ஆஸ்டிப் லிமிடெட், 4.7 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது .

இது பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் வேறு ஒருவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.

இது EN+ இன் வருடாந்திர கணக்குகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ( டெரிபஸ்காவின் பங்குகளைக் கொண்ட ஆற்றல் மற்றும் உலோகக் குழுமம். ) டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆராய்ச்சியின் படி, சொத்து, நிறுவனத்தின் முகவரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

டெரிபஸ்காவுடன் தொடர்புடைய, பிரிட்டிஷ் தொழிலதிபர் ஒருவரால் இயக்கப்படும் பிரிடிஷ் வங்கிக் கணக்குகளை நீதிபதி முடக்கியுள்ளார். இந்தக் கணக்குகள் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவுவதாக தேசிய குற்றவியல் ஏஜென்சி புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

பொருளாதாரத் தடைகள் ” மிகவும் தவறானவை” மற்றும் “ஆதாரமற்ற மற்றும் வெற்றுக் குற்றச்சாட்டுகளின்” அடிப்படையிலானவை என்று டெரிபஸ்காவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

” டெரிபஸ்கா ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை. அவர் ரஷ்ய அரசு மற்றும்/அல்லது விளாதிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று கூறுவது தவறு” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அவர் மீது தடை விதிக்கும் முடிவிற்கும் நீதிக்கும் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கும் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.”

பிரிட்டனை தளமாகக் கொண்ட பில்லியனர் மிக்கேல் ஃப்ரிட்மேன் மீது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது.

இதையடுத்து சர்வதேச சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட்டை வைத்திருக்கும் முதலீட்டு நிறுவனமான LetterOne இல் அவரது பங்குகள் முடக்கப்பட்டன. அவர் ” அதிபர் விளாதிமிர் புதினுடன் நெருங்கிய தொடர்புடையவர்” என்று கூறிய பிரிட்டிஷ் அரசு, மார்ச் 15 ஆம் தேதி அவர் மீது பொருளாதாரத்தடைகளை விதித்தது.

பிரிட்டிஷ் அரசு விதித்த தடைகள் தன்னை “அதிர்ச்சியடையச் செய்தன” என்றும், விளாதிமிர் புதினுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக்கூறப்படுவது”முற்றிலும் தவறானது” என்றும் ஃப்ரிட்மேன் பிபிசியிடம் கூறினார்.

லெட்டர்ஒன் நிறுவனத்தில் ஃப்ரிட்மேன் மற்றும் பீட்டர் அவென் (கீழே காண்க) ஆகியோருக்கு 50% க்கும் குறைவான பங்குகளே உள்ளன. இந்த வணிக கூட்டாளர்களுக்கு “நிறுவனத்துடன் இனி எந்த தொடர்பும் இல்லை” என்று நிறுவனம் அறிவித்தது.

12 பில்லியன் டாலர் மதிப்புள்ளவர் என்று கருதப்படும் ஃப்ரிட்மேன், வடக்கு லண்டனில் உள்ள அத்லோன் ஹவுஸ் என்ற பெரிய சொத்தை வைத்திருக்கிறார். அதற்காக அவர் 2016 இல் 65 மில்லியன் பவுண்டுகள் செலுத்தினார்.

Athlone House, London
கட்டிடம் முதலில் விக்டோரியன் தொழிலதிபருக்காக வடிவமைக்கப்பட்டது என்று ஃப்ரிட்மேன் உள்ளூர் செய்தித்தாளான ஹாம்ப்ஸ்டெட் மற்றும் ஹைகேட் எக்ஸ்பிரஸிடம், கூறினார். “ஒரு தொழிலதிபராக நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே சொத்து மற்றும் நிலத்திற்கு ஈர்க்கப்பட்டது என் விதி என்று நான் உணர்ந்தேன். “என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாதாள மது அறை, சினிமா அறை, நீச்சல் குளம், யோகா அறை போன்றவற்றைச் சேர்ப்பது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பிற்கான திட்ட அனுமதியை ஃப்ரிட்மேன் பெற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத் தடைகளில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அவென், “விளாதிமிர் புதினின் மிக நெருங்கிய வணிகத்தலைவர்களில் ஒருவராக” கருதப்படுகிறார். அவர் “அதிபரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்.”

மிகேல் ஃப்ரிட்மேனுடன் சேர்ந்து, லெட்டர்ஒன் நிறுவனத்தில் இந்த ரஷ்ய பெருமுதலாளியின் பங்குகளும் முடக்கப்பட்டன.

சைப்ரஸை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் சர்ரேயின் வெர்ஜீனியா வாட்டரில் உள்ள இங்கிலிஸ்டன் ஹவுஸுக்கு 8 மில்லியன் பவுண்டு செலுத்தியதை நிலப் பதிவேடு பதிவுகள் காட்டுகின்றன.

 Rick Pushinsky

அவென் பெருமளவிலான சொந்த கலைத் தொகுப்பை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் காண்டின்ஸ்கி, லூயி பூர்ஷ்வா மற்றும் ஹென்றி மூர் ஆகியோரின் படைப்புகளும் அடங்கும். அவரது இல்லத்தில் இந்த கலைப்படைப்புகளை ஃபைனான்ஷியல் டைம்ஸ் புகைப்படம் எடுத்துள்ளது.

அவர்மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைவிதிக்கப்பட்ட பிறகு, அவர் ராயல் அகாடமியின் அறங்காவலர் பதவியில் இருந்து விலகினார். அது அவரிடமிருந்து பெற்ற நன்கொடையைத் திரும்ப அளித்துவிட்டது.

பீட்டர் அவெனின் கலைத் தொகுப்பு

மத்திய லண்டனில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்ட் மற்றும் ஸ்டுடியோவும் அவரது குடும்பத்திற்கு சொந்தமானவை என்று அவென் பிபிசியிடம் தெரிவித்தார்.

” ரஷ்ய அதிபர் மாளிகைக்கு நெருக்கமான கோடீஸ்வரர்” என்ற பிரிடிஷ் அரசின் விவரிப்பில் தனக்கு “முற்றிலும் உடன்பாடில்லை” என்றார் அவர்.

தனக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் “புரிந்துகொள்ளக்கூடியவை, ஆனால் நியாயமற்றவை” என்று கூறிய அவர், தடைக்கான நியாயமான காரணங்களைத்தான் காணவில்லை என்றும் விளாதிமிர் புதினின் கட்டளையின்பேரில் தான் ஒருபோதும் செயல்படவில்லை என்றும் கூறினார்.

“நானும் எனது கூட்டாளிகளும் எப்போதும் அரசியலில் இருந்து விலகி இருக்கவே முயற்சி செய்தோம் என்றார் அவர்.

யுக்ரேன் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது, கீயவ்வில் பிறந்த ஜெர்மன்கானை, “யுக்ரேனை சீர்குலைப்பதில் ஈடுபட்டுள்ள விளாதிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளி” என்று பிரிட்டன் அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். அவர் மீது கடந்த மார்ச் மாதம் பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

அவரும் அவரது மனைவி அஞ்செலிகாவும் பிரிட்டனில் பல சொத்துக்களை வைத்துள்ளனர்.

இந்த ஜோடி, செஷெல்ஸ் நிறுவனமான அபிலோசா கார்ப்பரேஷனில் பங்குகளை வைத்திருப்பதை பனாமா ஆவணங்கள் வெளிப்படுத்தின.

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 2008 ஆம் ஆண்டில் 62 மில்லியன் பவுண்டு செலுத்தியதாக நிலப் பதிவேடு ஆவணங்கள் காட்டுகின்றன.

ஜெர்மன் கான், 2005ல், அப்பகுதியில் மேலும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார். 2018ல், நிலப்பதிவு ஆவணங்களின்படி, அவை அவரது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டன.

இந்த ஜோடி 2014 ஆம் ஆண்டு சர்ரேயில் உள்ள வெர்ஜீனியா வாட்டரில் ஒரு மாளிகையை 26 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது. அந்த மாளிகை 2021, டிசம்பர் 24 ஆம் தேதி Ravenmorrow Limitedக்கு 31 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.

இப்போது சொத்து யாருக்கு சொந்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. Ravenmorrow Limited கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுவப்பட்டது மற்றும் பிரிடிஷ் நிறுவனத்தின் பதிவுகளில் பயன்பெறும் உரிமையாளராக யாரும் அடையாளம் காணப்படவில்லை.

கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு கான் பதிலளிக்கவில்லை.

இகோர் ஷுவலோவ் மீது மார்ச் மாதம் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது பிரிட்டன் அவரை “புதினின் உள் வட்டத்தின் முக்கிய அங்கம்” என்று கூறியது.

ஒயிட்ஹாலில் 11 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய பல சொத்துக்கள் பிரிட்டனில் அவருக்கு உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சோ நவால்னியால் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அமைப்பால் இது முதலில் தெரிவிக்கப்பட்டது.

சொத்துக்கள் ரஷ்யாவில் உள்ள சோவா ரியல் எஸ்டேட் எல்எல்சிக்கு சொந்தமானவை என்பதை நிலப் பதிவேடு ஆவணங்கள் காட்டுகின்றன. ஊழல் எதிர்ப்பு அமைப்பால் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதிவுகள்,” அவை திரு ஷுவலோவ் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமானவை,” என்பதைக் காட்டுகின்றன.

எங்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ஷுவலோவின் செய்தித் தொடர்பாளர், அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமை 2014 இல் “ஷுவலோவ் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படும்” ரஷ்ய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

2014 இல் ரஷ்ய நாடாளுமன்றத்தில் திரு ஷுவலோவ் தனது மற்றும் தனது மனைவியின் கூட்டு சொத்து மதிப்பு என அறிவித்த 6,34,000 பவுண்டுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு கணிசமாக அதிகமாக உள்ளது.

ஷுவலோவின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், இந்த விவகாரம் “திறமையான அரசு தணிக்கைக்கு உட்பட்டவை” என்றும், “எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை” என்றும் கூறினார்.

மிகேலின் மகன் செய்த், மத்திய லண்டலில் உள்ள அலுவலக வளாகத்தை வைத்துள்ளார். அது 2013 ஆம் ஆண்டு, 42 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் இருக்கும் நெருங்கிய உறவின் காரணமாக 2021 ஆகஸ்டில் குட்செரிவ் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதித்தது.

குட்செரிவ், சஃப்மர் குழுமத்தின் நிறுவனர் ஆவார், இது ஒரு ரஷ்ய கூட்டு நிறுவனமாகும். குட்செரிவுக்கு இனி சஃப்மரில் எந்தப்பங்கும் இல்லை. அது இப்போது தடைகள் விதிக்கப்படாத பிரிட்டிஷ் குடிமகனான அவரது மகன் செய்துக்கு சொந்தமாக உள்ளது.

பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சிட்டி ஆஃப் லண்டன் அலுவலக வளாகம், செய்த் குட்செரிவுக்கு சொந்தம் என்று பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியது.

“செய்துக்கு அவரது தந்தையுடன் எந்த வணிக தொடர்பும்” இல்லை என்று குட்செரீவின் பிரதிநிதிகள் பிபிசியிடம் கூறினர்.

2016 இல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த அவரது ஆடம்பரமான திருமணம், ஜெனிபர் லோபஸ் மற்றும் என்ரிக் இக்லேசியாஸ் ஆகியோரின் கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது.

யூரி சோலோவியேவ் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்ய வங்கி VTB இல் உயர் பதவியில் இருப்பவர், இந்த ஆண்டு மார்ச் 15 அன்று பிரிடிஷ் அரசு அவர் மீது தடைகளை விதித்தது. 51 வயதான இவர் ரஷ்ய மற்றும் பிரிடிஷ் குடியுரிமை பெற்றுள்ளார்.

அவரது மனைவி கலினா உல்யுட்டினா பல்கேரியாவில் முன்பு “தங்க பாஸ்போர்ட் திட்டத்தில் சிக்கியிருந்தார்” என்று அமெரிக்க கருவூல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோல்டன் பாஸ்போர்ட் திட்டங்கள் ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதன்மூலம் குடியுரிமை பெற அனுமதிக்கின்றன.

சோலோவிவ் தனது சொந்த பெயரில் இரண்டு லண்டன் சொத்துக்களை வைத்திருக்கிறார். ஒன்று ஹாம்ப்ஸ்டெட்டில் உள்ள பென்ட்ஹவுஸ், மற்றொன்று வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ளது.

கென்சிங்டன் அரண்மனைக்கு அருகில் உள்ள மூன்றாவது அடுக்குமாடி குடியிருப்பு 2006 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு உறவினர் பெயரில் வாங்கப்பட்டது. இது 2016 ல் பனாமா ஆவணங்கள் கசிந்ததில் வெளிப்படுத்தப்பட்டது.

சோலோவிவ் ” 2022 பிப்ரவரி 22 அன்று VTB குழுவிலிருந்து வெளியேறினார்” என்று VTB இன் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். அன்றுதான் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பைத் தொடங்கியது.

“VTB இல் பணிபுரியும் போது சோலோவிவ் மீது எந்த நாடும் தடை விதிக்கவில்லை,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான Gazprombank இன் நிர்வாகக் குழுவின் தலைவர் ஆண்ட்ரே அகிமோவ் மீது 2018 இல் அமெரிக்கா தடை விதித்தது. இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனும் அவர் மீது தடை விதித்தது.

கேத்தரின் பெல்டன் தனது புத்தகமான புதின்ஸ் பீப்பிளில் கூறியது போல், அவர் ஒரு முன்னாள் உளவுத்துறை செயல்பாட்டாளர் மற்றும் “விளாதிமிர் புதினின் ஆட்சிக்கு பின்னால் உள்ள மிக முக்கியமான நிதியாளர்களில் ஒருவர்”.

பத்திரிக்கையாளர்களின் சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றிய பிபிசி, லண்டனில் உள்ள சொத்துக்களுடன் அகிமோவை இணைக்கும் பண்டோரா ஆவணங்களின் ஆதாரங்களை கண்டது.

அகிமோவின் கூட்டாளி மரியானா சாய்கினா நைட்ஸ்பிரிட்ஜில் ஒரு அபார்ட்மெண்ட் வைத்திருப்பதாக நிலப் பதிவு ஆவணங்கள் காட்டுகின்றன. இதை பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (பிவிஐ) நிறுவனமான இன்மா இன்வெஸ்ட்மென்ட், 2012 இல் 10 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது.

அகிமோவின் பல நிறுவனங்களின் இணை உரிமையாளராக திருமதி சாய்கினா பட்டியலிடப்பட்டுள்ளார். மேலும் அவர் ரஷ்ய ஊடகங்களால் திரு. அகிமோவின் மனைவி என்று வர்ணிக்கப்படுகிறார்.

பிபிசி யின் கேள்விகளுக்கு அகிமோவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

போலினா கோவலேவா ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவின் மற்றொரு மனைவியின் மகள் என்று பிரிடிஷ் அரசு தெரிவித்துள்ளது.

விளாதிமிர் புதின் மீது பிரிட்டிஷ் அரசு தடைவிதித்த அதே நேரத்தில் செர்கெய் லாவ்ரோ மீதும் தடை விதிக்கப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, மார்ச் 24 அன்று, பிரிடிஷ் அரசு திருமதி கோவலேவா மீதும் தடை விதித்தது. அவர் £4 மில்லியன் மதிப்புள்ள லண்டன் சொத்து வைத்திருப்பதாக கூறப்பட்டது.

பொலினா கோவலேவா தனது 21வது வயதில் 2016ஆம் ஆண்டு எந்த அடமானமும் இல்லாமல் கென்சிங்டனில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதாக நிலப் பதிவு ஆவணங்கள் காட்டுகின்றன.

கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு திருமதி கோவலேவா பதிலளிக்கவில்லை.

ஆர்கடி ரோட்டன்பெர்க், விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இவர்கள்செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள ஜூடோ ஜிம்மில் ஒருவர் மற்றவரை எதிர்த்து விளையாடுவார்கள்.

2014 ஆம் ஆண்டு ரஷ்யா க்ரைமியாவை இணைத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

“அதிபர் புதினுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவுகளை” மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் அரசும் அவர் மீது தடை விதித்தது. அவரது சகோதரர் போரிஸ் மற்றும் மகன் இகோர் ஆகியோர் கடந்த மாதம் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

2020 ஜூலையில் அமெரிக்க செனட்டின் விசாரணையில், ரோட்டன்பெர்க் சகோதரர்கள் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக விலையுயர்ந்த கலைப்பொருட்களை ரகசியமாக வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.

வின்டில்ஷாம் கிராமத்தில் உள்ள அப்பர் ரிப்ஸ்டன், பிரிட்டிஷ் வெர்ஜீனியா தீவுகளில் (BVI) பதிவுசெய்யப்பட்ட நிறுவனமான Ravendark Holdings Limited மூலம் 27.5 மில்லியன் பவுண்டுக்கு 2012 இல் வாங்கப்பட்டது. ரோட்டன்பெர்க்கிற்கு சொந்தமானதாகக் கூறப்படும் மற்றொரு BVI நிறுவனத்திடமிருந்து இது 30 மில்லியன் பவுண்டு கடனைப் பெற்றது.

ரோட்டன்பெர்க்கின் நலனுக்காக இந்த வீட்டை அறக்கட்டளையின் பெயரில் Ravendark வைத்திருக்கிறது என்று 2021 நவம்பரில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. பிபிசியின் கேள்விகளுக்கு ரோட்டன்பெர்க் பதிலளிக்கவில்லை.

பிரிட்டனில் உள்ள மாளிகை யாருடையது என்பதை நிறுவுவதில் மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்கும் சிரமங்கள், தடை விதிக்கப்பட்டுள்ள பெருமுதலாளிகளின் சொத்துகளைக் கண்டறிவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

(கூடுதல் செய்திகளை அளித்தவர்கள் ஜோன் கெல்லி மற்றும் ஜேம்ஸ் ஆலிவர்)

வடிவமைப்பு- ஜானா டாவ்ஷின்ஸ்கி

-BBC TAMIL NEWS-

Share.
Leave A Reply

Exit mobile version