ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 8 பொலிஸார் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்  கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி – கொழும்பு ரயில் மார்கத்தை ரம்புக்கனை பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில்,

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டபோது, ஆர்ப்பாட்டகாரர்கள் பொலிஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் அங்கு தரித்து நின்ற எண்ணெய் பவுசருக்கும் தீ வைக்க முற்பட்டனர்.

இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார்  மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்துள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், அப்பகுதியில் அமைதியை பேணுவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இராணுவமும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version