ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த முயன்றனர். அதனால்தான், பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தை பயன்படுத்தினர் என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவ்வாறு கொளுத்தியிருந்தால், ரம்புக்கனை இன்றில்லை என்றார்.

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிகொண்டிருக்கின்றனார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தியினர், கடுமையான கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பை வெளியிட்டனர்.

ரம்புக்கனையில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்; காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் மூவரின் நிலை கவவைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்றைய தினம்(19) ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குபட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்கு அப்பால் செயற்பட்டார்களா என்பதை ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

ரம்புக்கனையில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்ட போதிலும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version