ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து  ‘ கோட்டா கோ கம ‘ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றதாக கூறி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாச (30158) பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதனை உறுதி செய்தார். கடந்த ஏபரல் 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் அவர் இவ்வாரறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர்,  கடந்த 14 ஆம் திகதி  பொலிஸ் சீருடையில் வந்து  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம்  பலரையும் ஈர்த்தது.

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை  தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான்  சுரங்கங்களில் பணியாற்றியேனும் வாழ்வதாக அந்த பொலிஸ்  உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர், சார்ஜனுக்கு எதிராக   ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன் தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும்  குறித்த சார்ஜன் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறி அவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறான நிலையிலேயே, அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version