எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பங்களாதேஷிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்தும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இவற்றை தவிர சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் ஜப்பான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்படவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஒத்துழைப்பு 6 மாதங்களுக்குள் பகுதி, பகுதியாக கிடைக்கும் எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை கூறியுள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஒதுக்கீடுகளை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு தேவையான அவசர மனிதநேய உதவிகளை பெற்றுக்கொடுக்க சீனா தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளது.

சீன வௌிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியன இணைந்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.

இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version