யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115 ஆவது வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி 84.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கரிசன் 41 ஓட்டங்களையும் அணித்தலைவர் அபிசேக் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் விதுர்சன் மற்றும் கவிதர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இன்னிங்சில் 45 ஒவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.
மத்திய கல்லூரி சார்பில் சாரங்கன் 41 ஓட்டங்களையும், நிசாந்தன் 28ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
42 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
துடுப்பாட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் சபேசன் 105 ஜெபனேசர் 35, சுகீதன் 34 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியுட்டன் 3 விக்கெட்டுகளையும், கௌதம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மத்திய கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் கஜன் 53 ஓட்டங்களையும், சாரங்கன் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் அசாந் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சதத்தினை பூர்த்தி செய்த சென்ஜோன்ஸ் கல்லூரி வீரர் சபேசன் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர் அசாந் தெரிவுசெய்யப்பட்டார்
சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி வீரர் சன்சயன் தெரிவுசெய்யப்பட்டார்.
போட்டியின் சகலதுறை ஆட்டக்காரனாக மத்திய கல்லூரி வீரர் கஜன் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த விக்கெட் காப்பாளராக மத்திய கல்லூரி வீரர் சாரங்கன் தெரிவு செய்யப்பட்டார்.