கதிஜாவா கண்மணியா என காதலில் குழம்பித் தவிக்கும் ராம்போவின் கலகல ரொமாண்டிக் காமெடி கதையான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தோடு வருகிறார் விக்னேஷ் சிவன். கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் ராம்போவாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்கள்.

பொதுவாக விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் படங்களில் அவர் கதாப்பாத்திரங்கள் மீது எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ராம்போவில் ஆரம்பித்து, பான் இந்தியா படங்கள், ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியம் என பலவற்றை இந்த பேட்டியில் பிபிசி தமிழுக்காக பேசி இருக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடித்தீர்கள். இப்போது அதே இயக்குநருடன் இந்த ‘ராம்போ’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்?

“நமக்கு மட்டும் ஏன் ஒரு விஷயம் நடப்பது இல்லை, நாம் மட்டும் ஏன் துரதிருஷ்டவாசியாக இருக்கிறோம் என அவ்வப்போது தோன்றும் இல்லையா?

நாம் எல்லாம் சரியாக செய்து கொண்டிருக்கும் போது எதாவது ஒரு விஷயத்தில் அது சரியாக அமையவில்லை என்றால் ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என தோன்றும் இல்லையா? அந்த மாதிரியான ஒரு நபர் தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ராம்போ. ஆனால், ரொம்ப நல்லவன்.”

‘நானும் ரெளடிதான்’ படத்தை பொருத்தவரை அது ஒரு ரொமான்டிக்- காமெடி வகையில் இருந்தது. இப்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்கும் போது இந்த படமும் அது போன்றதொரு படமாக இருக்க கூடும் என ஊகிக்க முடிகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் படங்களில் மட்டும் தான் உங்களுக்கு இந்த ரொமாண்டிக் – காமெடி எளிதாக அமைகிறதா?

“அப்படி இல்லை! அவர் எழுதற விதம் அப்படி இருக்கலாம். இது போன்ற ரொமான்டிக் காமெடி வகை கதைகளை அவர் மிக அருமையாகவே எழுதுவார்.

இந்த கதையில் நான் நடிக்காமல் வேறு யாரேனும் நடித்திருந்தாலும் கூட கதை இதுவாக் தான் இருந்திருக்கும். ஆனால், வசனங்கள், சில காட்சிகள் போன்றவை நடிகர்களுக்கு ஏற்றது போல முன்பின் மாறும்.

 

பல சமயங்களில் படப்பிடிப்பு தளத்தின் சூழல் கூட கதையின் தன்மையை மாற்றும். அப்படி ஒரு காட்சி இதில் மாறி இருக்கிறது. நான் இதற்கு முன்பு நடித்த ‘கககபோ’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களும் இந்த வகையிலான படங்கள் தான். அதுவும் நன்றாகவே வந்திருக்கும்”.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கண்மணி, கதிஜா என நயன்தாரா, சமந்தா ஆகியவருக்கும் வலுவான கதாபாத்திரம் இருப்பதாக அறிகிறோம். நிஜத்தில் இந்த இருவரில் எந்த கதாப்பாத்திரம் உங்களுக்குப் பிடித்தமானது?

“நிஜத்திலும் சரி, படத்திலும் சரி இருவருமே வலுவான கதாபாத்திரம் கொண்டவர்கள். படத்தில் நீங்கள் பார்க்கும் போதே தெரிய வரும்.

படத்தில் ராம்போவால் ரெண்டு பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்கவே முடியாது. அதுதான் அவனது பிரச்னையாகவும் இருக்கும்.

படத்தின் முக்கிய ஒரு வரியும் அதுதான். ராம்போவின் கதையாக இது இருந்தாலும் மூவருக்கும் கதையை நகர்த்தி செல்வதில் முக்கிய பங்கு இதில் உண்டு”.

நயன்தாரா- சமந்தா நட்பு குறித்து சொல்லுங்கள். இரு முன்னணி கதாநாயகிகள் எனும் போது எந்த ஈகோ பிரச்னையும் வரவில்லையா?

“நிச்சயம் இல்லை! என்னை விட அவர்கள் இருவரிடையேயான நட்பு படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு அழகாக இருந்தது.

சமந்தா இந்த கதிஜா கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் பேசி சம்மதிக்க வைத்ததே நயன்தாராதான்.

இருவருக்கும் கதாபாத்திரத்தில் எந்த ஏற்றத் தாழ்வும் வந்து விடாமல், விக்கியும் அழகாக கதை அமைத்து இருக்கிறார்”.

உங்கள் சினிமா வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தீர்கள். பின்பு கதாநாயகன், வில்லன், மீண்டும் முக்கிய கதாபாத்திரங்கள் என நடித்து வருகிறீர்கள். இப்படி கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பது ஏன்?

“தொடர்ந்து கதாநாயகனாக இருந்து வருவது பாதுகாப்பின்மையான ஒரு மனநிலையை எனக்கு கொடுக்கிறது.

முடிந்த அளவு நல்ல கதைகள், அதில் என் கதாபாத்திரம் நல்லதாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதனால் தான் கதாநாயகன் என்ற பிம்பம் பற்றி யோசிக்காமல் நல்ல கதாப்பாத்திரங்கள் கொண்ட கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்”.

 

உங்களது சமீபத்திய படங்களான ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’ போன்ற படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அந்த சமயத்தில் இதை எப்படி எடுத்து கொண்டீர்கள்?

“அந்த விமர்சனங்களை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அனைவரது வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜமான விஷயம்.

நமக்கு அது வந்திருக்கிறது. அவ்வளவு தான் என்று பார்க்க வேண்டும். நீங்கள் அது குறித்து ரொம்ப யோசித்தால் அது உங்களை தின்று விடும் என்பது உண்மை. அதனால், பெரிதாக கவலைப்படத் தேவையில்லை”.

சமீபத்தில் தமிழில் வெளியான அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட முன்னணி கதாநாயகர்கள் பலரது படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், பான் இந்தியா திரைப்படங்கள் என வெளியான பிற மொழி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த பான் இந்தியா சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?

“நிஜமாக எனக்குத் தெரியவில்லை. அந்ததந்த காலத்தில் நடக்க வேண்டியது எல்லாம் நடக்கிறது. எல்லா படங்களையும் ‘பான் இந்தியா’ படங்களாக எடுக்க வேண்டும் என்பது இல்லை.

எனக்கு முதலில் ‘பான் இந்தியா’ படம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ற படங்களை எடுக்கிறோம். என்னுடைய முந்தைய படங்கள் மற்ற மொழிகளில் ‘டப்’ ஆகி சென்றிருக்கின்றன.

அந்த காணொளிகளை எல்லாம் யூடியூப்பில் சென்று பார்த்தால் அது ஒரு கோடி பேர், இரண்டு கோடி பேர் என பார்த்திருப்பார்கள்.

என்னுடையது என்று மட்டுமில்லை, மற்ற கதாநாயகர்களின் படங்களுக்கும் இப்படி நடந்திருக்கிறது. மக்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அவர்கள் அதை தேடிப் பார்த்து விடுவார்கள். யாருக்கு சென்று சேர வேண்டுமோ அதுவும் சேர்ந்து விடும்.

ஆனால், எல்லா கதைகளையும் எல்லாோருக்குமான கதையாக வடிவமைத்து விட முடியாது. அந்தந்த மொழி மக்களுக்கான படமாக எடுக்கும் போது இன்னும் நெருக்கமாக இருக்கும். ‘பான் இந்தியா படங்கள் காலங்களுக்கு’ மத்தியில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஒரு ‘அக்மார்க் தமிழ்ப்படம்’ என விக்னேஷ் சிவனும் ட்வீட் செய்திருந்தார்”.

பொதுவாக நீங்கள் பேட்டிகளில் பேசும் போது நிறைய தத்துவம் சார்ந்த விஷயங்களை சொல்கிறீர்கள். இயல்பாகவே நீங்கள் அப்படிதானா?

“அந்த கேள்விக்கான தேவை அதுவாக இருக்கும். ஒருவர் கேட்ட கேள்விக்கு இன்னும் எப்படி அதை புரிய வைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும் இல்லையா? மற்றபடி அப்படி பேச வேண்டும் என்று நினைத்து பேசுவதில்லை. சுயமாக சிந்தித்து எப்போதும் தத்துவங்களோடு இருக்க முடியுமா?”

‘கடைசி விவசாயி’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று. அதே சமயத்தில் புரிந்து கொள்ள முடியாமல் போகும் அபாயமும் உண்டு எனும் போது எப்படி இது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பீர்கள்?

“அதற்கு முழுக்க முழுக்க மணிகண்டனின் எழுத்துதான் காரணம். குறிப்பாக அதில் என்னுடைய கதாப்பாத்திரம் கடைசியில் இயற்கையோடு கலந்து விடுவது எல்லாம் எப்படி எழுதினார் என்பது கதை கேட்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

படம் வெளிவந்ததும் நல்லவேளை நான் அதில் இருந்தேன் என மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு ஆன்மீகத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வர ஆரம்பித்தது. நானுமே அதை நோக்கி பின்பு தேட ஆரம்பித்தேன்.

எல்லாவற்றையும் வியாபார நோக்கத்தில் பார்ப்பது என்று ஒன்று இருக்கிறது. ஆனால், நமக்கு ஒரு வேலை பிடித்திருக்கிறது அது சரி என்று படுகிறது.

அப்படி இருக்கும் போது வெறும் வியாபார நோக்கத்திற்காக பிடித்த வேலையை உதறி தள்ளுவது என்பது என்னால் முடியாது.

சரி என்று தோன்றினால் அதை செய்ய வேண்டும். நான் அந்த படத்தில் இருப்பதால் பத்து பேர் சேர்த்து பார்ப்பார்கள் என்றால் அதில் நிச்சயம் நான் இருப்பேன். இதில் என்ன இருக்கிறது. இந்த சினிமா தொழிலால் தானே நான் பிழைக்கிறேன். அதனால், ‘கடைசி விவசாயி’, ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களில் நடித்தேன்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்காக அசோக் செல்வன் என்னிடம் வந்து கேட்டார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு இருக்கிறது. கதையும் பிடித்திருந்தது.

நான் இருப்பது சப்போர்ட்டாக இருக்கும் என தோன்றியது. நடித்தேன். இதெல்லாம் குறைவு. இது போல என்னிடம் வந்து கேட்டு நான் வேண்டாம் என மறுத்தது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கும். இப்படியே நடிக்க வேண்டாம் எனவும் தோன்றும். அதனால், இப்போது அதை எல்லாம் நிறுத்தி விட்டேன்”.

தமிழ் சினிமா நடிகர்கள் முன்வைக்கும் கருத்துகள் பல சமயங்களில் சர்ச்சையாகி விடுகின்றன.

உதாரணமாக, இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்திருந்த ‘தமிழணங்கு’ ஓவியம் சர்ச்சையான பின்பும் அதை நீங்களும் பகிர்ந்திருந்தீர்கள். ஒரு கலைஞராக இருந்து கொண்டு சமூகம் சார்ந்த கருத்துகளை வெளியிடுவது எந்த அளவுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்?

“திரைக்கலைஞராக இருப்பதால் கட்டாயம் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை. விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் அது.

ஒரு விஷயம் குறித்த தெளிவும் அறிவும் இருந்தால் பேசலாம். இல்லை என்றால் அமைதியாக இருக்கலாம். அதையும் மீறி பேசினால் வருவதை எதிர்கொள்ள தான் வேண்டும். மற்றபடி இது ஒவ்வொருவடைய சொந்த விருப்பம்”.

Share.
Leave A Reply

Exit mobile version