ilakkiyainfo

பாக்கிஸ்தானின் வெளியுறவு அதைப் பிளவு படுத்துமா?

இரசியாவுடன் இம்ரான் கான் உறவை வளர்க்க முயன்றதால் அவர் பதவியில் இருந்து அமெரிக்காவால் அகற்றப்பட்டார் என அவரே பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனா-இரசிய உறவில் பாக்கிஸ்தானும் இணைந்து கொண்டால் அது அமெரிக்காவிற்கு மிகவும் பாதகமான நிலையை நடுவண் ஆசியாவில் ஏற்படுத்தும். இவற்றுடன் ஈரானும் இணைந்து கொண்டால் மேற்காசியாவின் நிலைமை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைப் பெரிதும் பாதிக்கும்.

2021 டிசம்பரில் அமெரிக்கா கூட்டிய மக்களாட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்ற பக்கிஸ்தான் மறுத்திருந்தது.

அந்த மாநாடு இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கூட்டப்பட்ட மாநாடு எனக் கருதப்பட்டது. சீனாவில் 2022 பெப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளை நேட்டோ நாடுகளின் அரசுறவியலாளரக்ள் புறக்கணித்தனர். ஆனால் அப்போதைய பாக் தலைமை அமைச்சர் இம்ரான் கான் பங்கேற்றார்.

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசிய – உக்ரேன் போர் ஆரம்பித்தவுடன் இரசியாவைக் கண்டிக்கும் படி அப்போது தலைமை அமைச்சராக இருந்த இம்ரான் கான் மீது பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

ஐநா சபையில் இரசியாவிற்கு எதிராக பாக் வாக்களிக்க வேண்டும் என 22 நாடுகளின் தூதர்கள் பாக் அரசுக்கு ஒரு பகிரங்க கடிதத்தையும் எழுதியிருந்தனர்.

அதை மறுத்த இம்ரான் கான் பாக்கிஸ்தான் யாருக்கும் அடிமையில்லை என முழங்கினார். அத்துடன் இந்தியாவிற்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதினீர்களா எனக் கேள்வியும் எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இரசியாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் பாக்கிஸ்தான் நடு நிலை வகித்தமை நேட்டோ நாடுகளை அதிருப்த்திக்கு உள்ளாக்கியது.

பாக்கிஸ்தான் இரசிய உறவு

14/08/1947 இல் சுதந்திரமடைந்த பாக்கிஸ்தானை 1948 மே மாதம் சோவியத் ஒன்றியம் (இரசியா) அங்கீகரித்தது.

பாக்கிஸ்தானில் மக்களாட்சி நடக்கும் போது இரசிய பாக் உறவு நல்ல நிலையில் இருக்கும். படையினரின் ஆட்சி நடக்கும் போது அது மோசமடையும்.

பாக்கிஸ்தானில் படையினரின் ஆட்சிகள் உருவாகுவதின் பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

1965-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாக் போரின் போது சோவியத் ஒன்றியம் தலையிட்டு போரை நிறுத்தியதுடன் இந்தியா கைப்பற்றிய நிலப்பரப்பில் இருந்து இந்தியாவை சோவியத் ஒன்றியம் வற்புறுத்தி விலகச் செய்தது.

அந்த வற்புறுத்தலின் பின்னணிய அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்த்திரியின் இறப்பில் முடிந்தது.

1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் உறுதியாக இணைந்திருந்தது.

1979-1989 வரை நடந்த சோவியத் ஆப்கானிஸ்தான் போரின் போது சோவியத்-பாக் உறவு மோசமடைந்தது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை இந்தியா வாங்கத் தொடங்கியதில் இருந்து இரசிய பாக் உறவு நெருக்கமடைந்தது.

சீனாவுடன் பாக்கிஸ்த்தானின் நட்பு ஏற்கனவே வளர்ந்திருந்த படியால் சீன இரசிய உறவு வளரும் போது பாக் – இரசிய உறவும் வளர்ந்தது. Pakistan Stream Gas Pipeline Project (PSGP) என்னும் பாக்கிஸ்தானில் 1,100கிலோ மீட்டர் நீளமான எரிவாயுக் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளின் உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட லாஹூரையும் கராச்சியையும் எரிவாயு விநியோகத்தில் இணைக்கும் $2.5பில்லியன் பெறுமதியான இத்திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை.

ஆர்மினியா அஜர்பைஜான் போரில் இரசியாவின் நிலைப்பாடு, கஜக்ஸ்த்தானில் இரசியா தலையிட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்கியமை பாக்கிஸ்த்தானின் முன்னாள் தலைமை அமைச்சரை மிகவும் கவர்ந்திருந்தது.

தனது ஆட்சியையும் இரசியா பாதுகாக்கும் என நம்பினார். ஆனால் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை இரசியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

§டொனால்ட் டிரம்ப் பாக்கிஸ்தானை வெறுத்தார்

1998-ம் ஆண்டு பராக் ஒபாமா பாக்கிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை அதிகம் தேவைப்பட்டது.

அமெரிக்கா தொடர்ச்சியாக பாக்கிஸ்த்தானுக்கு பல உதவிகளை செய்வதாகவும் ஆனால் அதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுவதாகவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும்  அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார்.

பாக்கிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா வழங்கி வந்த பயிற்ச்சிகளையும் நிறுத்தினார். அதனால் 2018-ம் ஆண்டு பாக் படைத்தளபதிகள் தொடர்ச்சியாக இரசியா சென்று பாக் படையினருக்கு இரசியா பயிற்ச்சி வழங்கும் ஒப்பந்தங்களையும் செய்தனர்.

2018 செப்டம்பரில் அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு வழங்கவிருந்த முன்னூறு மில்லியன் நிதி உதவியையும் டிரம்ப் இரத்துச் செய்தார்.

அமெரிக்கா-இந்தியா-பாக்கிஸ்தான்

அமெரிக்க-பாக் உறவும் அமெரிக்க-இந்திய உறவும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பட்டதாகவே இருக்கின்றது.

பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவை இரசிய நட்பில் இருந்து பிரித்து நேட்டோ நாடுகளின் பக்கம் இழுப்பதற்காக 2022 ஏப்ரில் 20-ம் திகதி இந்தியா பயணமானார்.

இந்தியாவையும் இரசியாவிடமிருந்து பிர்க்க வேண்டும் பாக்கிஸ்தானையும் இரசியாவுடன் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் நேட்டோ நாடுகள் பாக்கிஸ்த்தானை எப்படிக் கையாளப் போகின்றன என்ற கேள்விக்கான சாத்தியமான பதில்கள்:

1. பாக்கிஸ்தானில் இரசியாவிற்கு பாதகமான அமெரிக்காவிற்கு சாதகமான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்துவது.

2022 ஏப்ரல் மாதம் புதிய பாக் தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷரிஃப் அமெரிக்காவுடன் உறவை விரும்புகின்ற ஒருவர்.

ஆனால் அவரது பதவிக் காலம் இரண்டு கூட நீடிக்க முடியாது. 2023 ஒக்டோபருக்கு முன்னர் தேர்தல் நடக்க வேண்டும். அவரது கூட்டணிக் கட்சிகள் சீக்கிரம் தேர்தல் வேண்டும் என கதறுகின்றனர.

2. பாக்கிஸ்தானைப் பிரிப்பது. பாக்கிஸ்தானின் சிந்து, பலவரிஸ்தான், பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பிரிவினைவாதம் தலை தூக்கியுள்ளது.

பாக்கிஸ்த்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலுச்சிஸ்த்தான் மாகாணம் இருக்கின்றது.

அங்குள்ள குவாடர் துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. அத்துறைமுகம் சீனாவின் முத்துமாலைத் திட்டத்திலும் சீனாவின் பட்டி-பாதை முன்னெடுப்பு என்னும் பொருளாதாரத் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஏற்கனவே பலுச் இன மக்கள் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களால் கடும் சினம் அடைந்துள்ளனர்.

சீனர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களும் அங்கு நடந்துள்ளன. பலுச்சிஸ்த்தான் பிரிவினை ஈரானில் வாழும் பலுச் இன மக்களையும் பிரிவினைவாதத்தை வளர்க்கும். அதனால் பலுச் மக்கள் பாக்கிஸ்தானிற்கு ஈரானுக்கும் எதிராக அமெரிக்கவால் பாவிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்களின் மனதில் இருப்பவற்றை அவ்வப்போது சுப்பிரமணிய சுவாமி போட்டு உடைப்பது வழமை.

பாக்கிஸ்தானை நாம் நான்கு நாடுகளாகப் பிளவு படுத்துவோம் என அவர் சொன்னதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரித்தானிய இந்தியா இந்தியா பாக்கிஸ்தான் எனப் பிரியும் போது பலுச் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். நேரு அதை ஏற்க மறுத்தார். பலுச் இன மக்கள் அடிப்படையில் ஈரானியர்கள் ஆகும்.

பாக்கிஸ்த்தான் இரசிய சீன கூட்டில் இணைவது அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.

https://www.veltharma.com/

Exit mobile version