ilakkiyainfo

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்;துமா? (-பகுதி 2) -வி. சிவலிங்கம்

• அரசியல் தீர்வு குறித்து தமிழ் தலைமைகள் ஏன் மௌனம்?

– பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும்.
– பிரதமரின் ஆலோசனை அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
– சர்வதேச அடிப்படைச் சட்டங்களின் அடிப்படையில் சட்ட இயற்றலில் பாகுபாடு காட்டப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.
– மக்களின் கூட்டுச் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
– எந்த அரசு அமையினும் தேசிய சிறுபான்மை இனங்கள் ஏற்ற விகிதத்தில் மந்திரிசபையில் நியமிக்கப்பட வேண்டும்.
– அரச உயர் கட்டுமானங்களில் தேசிய சிறுபான்மை இனங்களின் நியமனம் ஏற்ற விகிதத்தில் அமைதல் வேண்டும்.
– சர்வதேச மனித உரிமை அம்சங்கள் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.
– கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் பாராளுமன்றத்திற்குள் அரசியல் பிரச்சனைகளைத் தணிப்பதற்கான முயற்சிகளும், மத்திய வங்கியின் தலைமையில் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இம் முயற்சிகள் குறித்து பல்வேறு தரப்பினரின் அபிப்பிராயங்களும் ஓர் குழப்பமான நிலமைகளைத் தோற்றுவித்து வருகின்றன.

நாட்டில் அரசியல் ஸ்திரமாக அமையாவிடில் பொருளாதார தீர்வுகள் எதுவும் மாற்றத்தைத் தரமாட்டா.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய சபை போன்றன கடன்களை வழங்குவதற்கான முன் நிபந்தனைகளாக அரசியல் மாற்றங்களை நிச்சயமாக வற்புறுத்தும்.

ஏனெனில் கடன் வழங்கும் நாடுகள் தமது முதலீடுகளுக்கான வருமானத்தை உறுதி செய்வதையே முதலில் கவனத்தில் கொள்ளும்.

மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தரும் பாடமென்ன?

தற்போது நிலவும் அரசியல் நிலமைகளை அவதானிக்கும்போது நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.

நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகள் மக்களை வீதிக்கு இழுத்து வந்துள்ள நிலையில் அவை அரசியல் நெருக்கடிகளை மேலும் உக்கிரப்படுத்தியுள்ளன.

பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கோரி அவர்களது வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் பாராளுமன்றம் அவற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

ஆனால் பாராளுமன்ற விவாதங்கள் எந்த விதத்திலும் மக்களின் பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.  இங்கிருந்தே நாம் பிரச்சனைகளை அவதானிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தற்போது நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், விவாதங்களும் இதுவரை காணாத அளவில் பாரிய பண்பு மாற்றங்களைத் தந்துள்ளது.

உதாரணமாக 2019ம், 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் முற்றிலும் வித்தியாசமான பிரச்சனைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

• ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பாதுகாப்பையும், சிங்கள, பௌத்த ஏகபோக அதிகார பலத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

• தனிச் சிங்கள மக்களின் அதிகரித்த வாக்குப் பலத்தின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என்ற அளவிற்கு விவாதங்கள் முன்னிறுத்தப்பட்டன.

இதன் மூலம் இலங்கை என்பது பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்பதை முற்றாக நிராகரிக்கும் போக்கு அதிகரித்தது.

இதன் விளைவாக தனிச் சிங்கள வாக்குப் பலத்தின் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதோடு, 2020ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதன் மூலம் சிங்கள, பௌத்த பேராதிக்கத்தின் சட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரானார்கள்.

இதனடிப்படையில் அரசியல் யாப்பில் 20வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகின.

மிகவும் வேகமாக சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்த ராணுவம் துணைக்கழைக்கப்பட்டு அரச உயர் கட்டுமானங்களில் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.

இதன் மூலம் அரச கட்டுமானம் என்ற நிர்வாகப் பொறிமுறை அரசியல் யாப்பு, சட்டரீதியான ஆட்சி, சுயாதீன நீதித்துறை என்பதை அரசியல் மயமாக்கி பாராளுமன்ற ஆட்சி முறை பலவீனமாக்கப்பட்டது.

சி;ங்கள பௌத்த பெருந்தேசியவாதம், ராணுவ கலப்புடனான அரச கட்டுமானம் என நாட்டின் அரசுப் பொறிமுறை படிப்படியாக மாற்றம் கண்டது.

கொரொனாவும், ஊழலும்

இங்கிருந்தே இன்றைய நாட்டு நிலமைகளை நாம் அவதானிக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் ஆட்சியாளரின் உள் நோக்கங்களை மிக விரைவாகவே அம்பலப்படுத்தியது.

கொரோனா நோய்த் தடுப்புத் தொடர்பான முடிவுகள் வைத்திய அதிகாரிகளுக்குப் பதிலாக ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகளின் உத்தரவுகளுக்குப் பணிந்து செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நோய் தொடர்பாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வைத்தியர்களின் ஆலோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன.

அதே போலவே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து வகைகள், வைத்திய உபகரணங்கள் போன்றன தனியாரால் இறக்குமதி செய்யப்பட்டன.

மருந்துகளினதும், உபகரணங்களினதும் தரங்களை நிர்ணயம் செய்யும் சுகாதாரப் பகுதியின் செயற்பாடு முடக்கப்பட்டு தரமற்ற மருந்துகளும், உபகரணங்களும் தனியாரால் இறக்குமதி செய்யப்பட்டு மிகப் பெருந்தொகையான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டதோடு மக்களின் சுகாதாரம் அலட்சியப்படுத்தப்பட்டது.

இவ்வாறு நாட்டின் சகல துறைகளிலும் ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பது சர்வ சாதாரணமாகியது.

சட்டம், ஒழுங்கு சீர்குலைந்தது. நாட்டில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் சாமான்ய மக்களினதும், தேசிய உற்பத்திக்கும் பயன்படுத்தாமல் வசதிபடைத்த சமூகத்தின் சிறு பிரிவினரின் ஆடம்பர வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் தேவைக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் வாழும் கோடிபதிகள் பயன்படுத்தும் வாகனங்கள் இலங்கையிலும் இறக்குமதி செய்யப்பட்டன. போதுமான போக்குவரத்து வீதிகளோ, இதர ஏற்பாடுகளோ இல்லாத நிலையிலும் மிக விலையுயர்ந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் வீதி விபத்துகள் அதிகரித்தன.

குழு ஆதிக்கத்தின் அவலங்கள்

இலங்கை அரசியற் கட்டுமானம் சிறு குழுவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரமும் அதே சிறு குழுவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றது.

ஒரு புறத்தில் கொரானா நோயின் தாக்கமும் அதனால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் குறிப்பாக விலைவாசி உயர்வு, உற்பத்திப் பாதிப்பு, வருமானப் பற்றாக்குறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பிரிவினர் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

எனவே நாட்டில் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்குக் காரணம் அரசு அவற்றை உரிய முறையில் செலவு செய்யத் தவறியதாகும்.

ஒரு புறத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அப் பணத்தை வழங்காமல் ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்குப் பெரும் பணம் செலவு செய்தமையால் வெளிநாட்டுச் செலாவணி விரயமாகியது.

இதனால்தான் அரசு அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே அதன் மிகவும் பலவீனமான பொருளாதார திட்டங்களின் தாக்கம் மக்களால் உணரப்பட்டது.

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மூலதனமாக்கி மக்களின் வாக்குகளை அபகரித்த போலித் தேசியவாதத்தின் உண்மைத் தோற்றம் மக்களால் மிக இலகுவாகவே அடையாளம் காணப்பட்டது.

தாமே இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்ததாக இன்று ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை தாமே ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவேதான் தாம் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதியை, பொதுஜன பெரமுன அரசை நிராகரிக்கின்றனர். அது மட்டுமல்ல தாம் கடந்த 70 ஆண்டு காலத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து ஓர் நீதியான அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு கோருகின்றனர்.

‘இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கி…

நாடு முழுவதும் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் அரசியல் மாற்றத்தையும் மக்கள் கோருகின்றனர்.

சகலரும் ‘ இலங்கையர்’ என்ற அடிப்படை உணர்வோடு வாழும் வகையில் புதிய அரசியல் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை நாடுகின்றனர். இதுவே இன்று காணப்பாடும் பாரிய பண்பு மாற்றமாகும்.

இப் பண்பு மாற்றத்தை உரிய விதத்தில் நாம் புரிந்து கொண்டால் மாத்திரமே புதிய அரசியலை நோக்கி நாம் செல்ல முடியும்.

இம் மாற்றங்கள் என்பது வெறுமனே அரசியல் கட்சிகள் மட்டத்தில் அல்லது கல்வியாளர் மட்டத்திலே காணப்பட்ட நிலை மாறி இன்று அவை சாமான்ய மக்களாலும் பேசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குப் பிரதான காரணம் இன்றைய நெருக்கடிகள் சகல மக்கள் பிரிவினரையும் தாக்கியுள்ளது.

மின்சாரம், எரிபொருள், பொருட்களின் விலை உயர்வு போன்றன சகல வருமானப் பிரிவினரையும் ஒரே விதமாகப் பாதித்துள்ளது.

இதனால்தான் மக்களின் சிந்தனையும் ஒரே விதமாக மாற்றம் பெற்று வருகிறது. மக்கள் ஊழலை ஏற்றே வாக்களித்தார்கள். அதிகார துஷ்பிரயோகத்தை ஏற்றே ஆதரித்தார்கள்.

ஏனெனில் அவை அவர்களது வாழ்க்கையை அதுவரை பாதிக்கவில்லை. இன்று அதே ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றன மக்களால் ஏற்றுக் கொள்ளும் எல்லைகளைக் கடந்து விட்டன. இதனால்தான் முழுமையான அரசியல் பொறிமுறை மாற்றத்தைக் கோருகின்;றனர்.

போராட்டங்களும், விமர்சனங்களும்

இலங்கையின் சகல பாகங்களிலும் பொருளாதாரப் பிரச்சனைகள் பாதித்துள்ள நிலையில் மக்களின் போராட்டங்களும் கிராமங்களிலேயே மிகவும் வலிமையாக நடைபெறுகின்றன.

‘கோதா வீட்டுக்குப் போ’ என்ற கோரிக்கை கொழும்பில் மட்டுமல்ல, அம்பாந்தோட்டை வரை பரந்து செல்கிறது.

விவசாயிகள், தொழிலாளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்தியர்கள், அரச ஊழியர்கள் என சகல தரப்பாரும் கிராமப் புறங்களில் போராட்டங்களை விஸ்தரித்துள்ளனர்.

இன்றைய போராட்டங்களின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாத சில பிரிவினர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடைபெறும் போராட்டங்களை கேளிக்கை விழாவாக, மத்தியதர வர்க்க பொழுது போக்காக வர்ணனை செய்து கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவை எதுவும் ஆச்சரியமானது அல்ல. ஏனெனில் வர்க்கப் பிளவுகள் உள்ள சமுதாயங்களில் போராட்டங்கள் தொடர்பான விமர்சனங்களும், பார்வைகளும் வர்க்க அடிப்படையிலேயே அமைகின்றன.

நாடு எங்ஙணும் வியாபித்து நடைபெறும் இப் போராட்டங்களின் ஒரு பகுதியாக கொழும்பை மையப்படுத்திய போராட்டங்களை அவதானிக்காமல் மேலெழுந்தவாரியாக ஏளனம் செய்வது வரலாறு பலதடவை உணரத்தியுள்ளது.

இருபதாவது திருத்தத்தின் மூலம் சர்வாதிகார, குடும்ப ஆதிக்கத்தை நோக்கி அதிகார வர்க்கத்தினரே சென்றனர்.

இன்று 21வது அரசியல் யாப்பு மாற்றத்தை நோக்கித் திரும்பியிருப்பது மக்களின் போராட்டத்தின் பெரு வெற்றியாகும்.

20வது திருத்தத்தின் மூலம் எதைச் சாதிக்கலாம் என நம்பினார்களோ அவர்களே அதன் தோல்வியை ஒப்புக் கொண்டு மீண்டும் 19வது, 21 வது திருத்தங்கள் எனப் பேசத் தொடங்கியிருப்பது மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

இப் பின்னணியில்தான் இம் மாற்றங்கள் தொடர்பாக நடைபெறும் விவாதங்களை நோக்க வேண்டும்.

குறிப்பாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்கள் மத்தியில் இப் போராட்டங்கள் மிகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் இம் முடிவுகள் சட்ட அடிப்படையில் சாத்தியமா? என்ற கேள்விகளும் எழும்பியுள்ளன.

உதாரணமாக, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்பது அமைச்சர்கள் மீதான பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எனக் கொள்ளலாம்.

ஏனெனில் அமைச்சர்களே இந் நிலமைகளுக்குப் பொறுப்பானவர்கள். இந் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற பாராளுமன்ற சாதாரண பெரும்பான்மை பொதுமானது.

அதாவது 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு இருப்பின் அரசாங்கம் கலைக்கப்படலாம்.

அவ்வாறான நிலையில் ஜனாதிபதி மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பொருட்டு புதிய அமைச்சர்களை நியமிக்கலாம்.

இதனால் பாராளுமன்றம் ஓர் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படலாமே தவிர ஜனாதிபதியின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜனாதிபதியின் ராஜினாவைக் கோராது.

ஜனாதிபதி மீதான குற்றச் சாட்டுகளைச் சுமத்துதல்

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது. வழக்குத் தொடர முடியாது.

ஆனால் பாராளுமன்றம் ஜனாதிபதி மீது குற்றங்களைச் சுமத்தி அதனடிப்படையில் அதாவது அவரால் கடமைகளை மேற்கொள்ள முடியாது எனவும், அவரது மனநிலை அல்லது உடலாரோக்கியம் போதுமானதாக இல்லை அல்லது அரசியல் அமைப்பு விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தி அல்லது ஊழல் மற்றும் தவறான நடத்தைகளைக் காரணம் காட்டி பதவி விலகுமாறு கோரலாம்.

ஆனாலும் இத் தீர்மானத்திற்குப் பாராளுமன்றறத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

அது மட்டுமல்ல, சில சமயம் பாராளுமன்றத்தின் பாதிப் பேரின் கோரிக்;கை போதுமானதாயின் அதனை சபாநாயகர் உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்து விசாரணையைக் கோரலாம்.

ஜனாதிபதி நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். இருப்பினும் நீதிமன்றமே அவரின் பதவி தொடர்பாக முடிவு செய்யும்.

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பாராளுமன்றம் ஜனாதிபதி மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியும். ஏனெனில் அவர் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டுள்ளார்.

அவரே தனது முடிவுகளுக்குப் பதில் கூற வேண்டும். உதாரணமாக, 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் முதலீட்டாளர்கள் மீதான வரிச் சலுகைகளை அறிவித்தார்.

இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பெருந்தொகையான வரியை வரித் திணைக்களம் இழந்தது. இதனால் பொருளாதாரப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள திறைசேரியிடம் பணம் போதவில்லை.

மத்திய வங்கியின் ஆளுநராக ஓர் அரசியல்வாதியை நியமித்தார். மத்திய வங்கி என்பது அரசாங்கத்திற்கு வழிகாட்டியாக செயற்பட வேண்டும். சுயாதீனமாக இயங்க வேண்டும்.

ஆனால் அரசின் தலையீடு மத்திய வங்கியில் காணப்பட்டதால் நாட்டின் தேவைக்கு அதிகமான அளவில் நாணயம் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது.

இதனால் பணவீக்கம் அதிகரித்து, நாணய மதிப்பு இறக்கம் ஏற்பட்டு பொருட்களின் விலையும் உயர்ந்தது.

இரசாயனப் பசளைகள் இறக்குமதி தடை காரணமாக தேயிலை உற்பத்தி, விவசாய உற்பத்தி குறைந்ததோடு, விவசாயிகளின் வருமானத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.

எரி வாயு பற்றாக்குறை, எரி பொருள் தட்டுப்பாடு, பாலுணவு பற்றாக்குறை மற்றும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டது. இவை யாவும் ஜனாதிபதியின் தீர்மானத்தின் விளைவாக நாட்டில் பாரிய பிரச்சனைகளைத் தோற்றுவித்தன.

தமது தீர்மானங்களில் தவறுகள் நடந்துள்ளதாக தற்போது ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவ்வாறாயின் ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்தியை இழந்துள்ளதாகக் கருத முடியும்.

இதே ஜனாதிபதி தொடர்ந்து பதவியில் இருந்தால் மக்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக்கூடும் என்பதால் ஜனாதிபதி மேல் பாராளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியும்.

ஜனாதிபதி மீதான மேலும் பல குற்றங்களைப் பாராளுமன்றம் முன்வைக்க முடியும். உதாரணமாக 20 வது அரசியல் திருத்தத்தின் மூலம் அதிக அதிகாரங்களைப் பெற்ற ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களைப் போதுமான வகையில் பயன்படுத்தவில்லை என்பதோடு, அவ்வாறாக மிக அதிகாரங்களைத் தனி ஒருவர் மீது குவித்து நாட்டில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தியிருப்பதனால் 20வது திருத்தம் தொடர்ந்தும் செயற்பட முடியாது என்பது மிகவும் வெளிப்படையாகிறது.

அதாவது தனி மனிதரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதற்கு இன்றைய நிலமைகள் மிகவும் உதாரணமாகும்.

அத்துடன் அதிகாரக் குவிப்பு என்பது ஜனாதிபதியின் இயலாமையையும், நடைமுறைப்படுத்தல் என்பது தனி மனிதரால் முடியாது என்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே 20வது திருத்தம் அகற்றப்படுவதோடு, பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படும் வகையில் 19வது திருத்தத்தில் மேலதிக மாற்றங்களோடு புதிய 21வது திருத்தம் கொண்டு வரப்படுதல் அவசியமாகிறது.

நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனத்தைத் திருப்பியுள்ளது.

உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனை நாட்டிப் அமைதியின்மையை மட்டுமல்ல, தேசிய ஐக்கியத்தையும் குலைத்துள்ளது. இதன் தாக்கம் தற்போது மக்களால் மிகவும் உணரப்பட்டு வருகிறது. இதனால்தான் ‘ இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கி மக்கள் கவனம் குவிந்து வருகிறது.

ஆனால் தமிழ் மக்களில் சில பிரிவினர் இன்னமும் இம் மாற்றங்களைக் காண மறுக்கின்றனர். இன்னமும் இனவாத அரசியலிற்குள் தமது தலைகளைப் புதைத்து கடந்த கால சந்தேகங்களை இன்னமும் நியாயப்படுத்தி அதில் அரசியல் குளிர்காய எண்ணுகின்றனர்.

தமிழ்க் குறும் தேசியவாதத்திலிருந்து மக்கள் மிக வேகமாக விலகி தேசிய அடிப்படையிலான மாற்றங்களை நோக்கிச் செல்கின்றனர்.

சிறுபான்மைத் தேசிய இனங்களில் பெரும்பான்மையோர் சிங்களப் பிரதேசங்களில் வாழ்வதாலும், இன்றைய இளைய தலைமுறையினர் பலர் சிங்கள மொழியில் தேர்ச்சியுடையவர்களாக மாறி வருவதாலும் இனவாதிகளுடன் தினமும் போராட்டம் அவர்களின் பிரதேசங்களிலேயே நடத்தி வருகின்றனர்.

இன்று சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அதன் அடிப்படைகளை இழந்து வருகிறது. நாட்டைக் கொள்ளையிடுவதற்கான சூழ்ச்சிகளாக இனவாதத்ததை மக்கள் காண்கின்றனர். இம் மாற்றங்களை வடக்கு, கிழக்கிலுள்ள குறும் தேசியவாத சக்திகள் காண மறுப்பதோடு, மக்களிடமிருந்து படிப்படியாக அந்நியப்பட்டுச் செல்கின்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் குறிப்பாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் கொடிய கோலங்கள் மக்களுக்குத் தெரிவதனால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் உரத்துச் சொல்வதற்கும் போராடுவதற்குமான வாய்ப்பான சூழலாக இன்றைய நிலமைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல், அதிகார பகிர்வு என்ற சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அணுகுமுறையை நோக்கிச் சென்றுள்ளதாக தமிழ் அரசியல் தலைமைகள் உண்மையில் கருதினால் அவற்றை மேலும் வற்புறுத்தி சிங்கள மக்களின் நம்பிக்கையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்பான தருணம் இதுவாகும்.

( தொடரும் )

-வி. சிவலிங்கம்

Exit mobile version