உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலையடுத்து கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்கள் ,மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் இவ்வாறு தோண்டி எடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், சாரா என்ற புலஸ்தினி மஹேந்திரனின் மரபணுவை ஆராய்வதற்காகவே இவ்வாறு உடற்பாகங்கள் தோண்டப்படவுள்ளன.

எவ்வாறாயினும், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் மரபணு மாதிரிகள் சாரா ஜெஸ்மினுடைய மரபணுவை ஒத்ததாக இருப்பதை வெளிப்படுத்தவில்லை.

கடந்த இரண்டு சோதனைகளின் போது மாதிரிகள் சாரா ஜெஸ்மினின் மரபணுவை ஒத்ததாக இருப்பதைக் காட்டாததால், மூன்றாவது மரபணு சோதனை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது வெடிப்பு மற்றும் மரபணு சோதனைகளைத் தொடர்ந்து சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாகவும், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் சந்தேகம் எழுந்தது.

சாரா ஜெஸ்மின் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தாரா அல்லது அந்த நேரத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா என்பதை அறியவே மூன்றாவது மரபணு பரிசோதனையை சி.ஐ.டி யினர் கோரியுள்ள நிலையில் குறித்த சடலங்கள் தோண்டியெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையிலேயே நீர்கொழும்பு – கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த மீண்டும் மரபணு பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண முன்னர் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் கல்முனையின் சாய்ந்தமருது பகுதியில் வெடிப்பின் பின்னர் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடற்பாகங்களை மீள தோண்டி எடுத்து மரபணு பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியிருந்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏப்ரல் 26 திகதி சாய்ந்தமருது – வெலிவேரியன் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பாதுகாப்பு படைகளுடனான மோதலின்போது குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version