உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன.

உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.

அவை குறுகிய தூரம்வரை பாயக் கூடியவையாக இருக்கும். போர்த்தாங்கிகள், கப்பல்கள், விமானங்கள் போன்ற சிறிய இலக்குகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவையாக இருக்கும்.

கேந்திரோபாய படைக்கலன்கள் எதிரியின் படைவலிமை, பொருளாதாரம், அரசியல் வலிமை போன்றவற்றை தகர்கக் கூடியவையாக இருக்கும்.

அவற்றால் படைத்தளங்கள் படைக்கல உற்பத்தி நிலையங்கள், நகரங்கள், உட்கட்டுமானங்கள், தொடர்பாடல் கட்டமைப்பு போன்றவற்றை அழிக்கலாம்.

இரசியாவிற்கு எதிராகப் போராட உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கியவை எல்லாம் உத்திசார் படைக்கலன்களே.

இரசியாவிற்கு எதிராக கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கினால் இரசியாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகளான ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கு அவற்றை வழங்கலாம் என்ற கரிசனையால் அவற்றை வழங்கவில்லை.

வலிமை மிக்க படைக்கலன்களைக் கொண்ட எதிரியுடன் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொண்ட மக்கள் போராடும் போது அவர்கள் பலத்த இழப்பைச் சந்திப்பார்கள்.

நோக்கத்தை மாற்றிய புட்டீன்

உக்ரேன் மீதான இரசியாவின் போர் உக்ரேனை நாஜிவாதிகளிடமிருந்து மீட்பதையும் உக்ரேனை படையற்ற பிரதேசமாக்குவதையும் நோக்கங்களாக கொண்டது என இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூறிக்கொண்டு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார்.

அவரது இந்த இரண்டாவது ஆக்கிரமிப்புப் போரின் உண்மையான நோக்கங்கள்

1. கிறிமியா மீதான இரசியப் பிடியை உறுதி செய்வது,

2. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவது.

3. உக்ரேனின் கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் இரசியக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.

4. இரசியப் படைகள் நிலை கொண்டுள்ள மொல்டோவாவின் Transnistria பிரதேசத்துடன் இரசியாவிற்கு ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவது,

5. கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கத்தை மேம்படுத்துவது.

உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்த முடியாது என்பதை உணர்ந்த நிலையில் புட்டீன் தனது படையினரை 2022 ஏப்ரல் 6-ம் திகதி உக்ரேன் தலைநகரை சுற்றி வளைத்த தனது படையினரை அங்கிருந்து முழுமையாக விலக்கிக் கொண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் அங்கு தன் படையினரை அதிகரித்தார்.

டொன்பாஸ் போருக்கு பொறுப்பாக சிரியாவின் கசாப்புக் கடைக்காரர் என மேற்கு நாடுகள் விபரிக்கும் ஜெனரல் அலெக்சாண்டர் வோர்ணிக்கோவை புட்டீன் நியமித்தார்.

இரசிய கட்டளைத் தளபதி ருஸ்டாம் மின்னெகயேவ் இரசியா அயல்நாடுகளின் நிலங்களை வென்றெடுக்க உள்ளது என்றார்.

உதவிகளை அதிகரித்த அமெரிக்கா

உக்ரேனின் கிழக்குப் பிராந்த்யத்தில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில் போர் உக்கிரமடையவிருக்கும் நிலையில் அமெரிக்கா 2022 ஏப்ரில் 21-ம் திகதி உக்ரேனியர்களுக்கு எண்ணூறு மில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை உதவியாக வழங்குவதாக அறிவித்தது.

அமெரிக்காவின் Howitzers ஆட்டிலெறிகள் தொண்ணூறை 184,000 குண்டுகளுடன் உக்ரேனுக்கு அவசரமாக வழங்குதல் அதன் முதல் கட்டமாக அமைகின்றது.

அவற்றை இயக்குவதற்கான துரிதப் பயிற்ச்சியையும் அமெரிக்கப் படையினர் பெயர் குறிப்பிடாத ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்து உக்க்ரேனியர்களுக்கு வழங்குகின்றனர்.

உக்ரேனுக்கு நிண்ட தூர ஆட்டிலெறிகள் 300 தேவைப்படுகின்றது. அமெரிக்கா 72ஐ மட்டும் கொடுத்துள்ளது.

உக்ரேன் தலைநகர் கீவ்வைப் போல் அல்லாமல் டொன்பாஸ் பிரதேசம் சமதரைப் பிரதேசமாகும்.

அங்கு ஆட்டிலெறிகள் பவிப்பது அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவும் இரசியாவும் நம்புகின்றன.

TB2 drones

உக்ரேன் போரில் துருக்கியின் TB-2 ஆளிலி வானூர்திகள் சிறப்பாகச் செயற்பட்ட படியால் அமெரிக்கா Ghost Phoenix எனப்படும் ஆளிலி வானூர்திகளை மிக அவசரமாக வடிவமைத்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இவை எதிரியின் இலக்கு மீது மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்கும் தன்மை கொண்டவை. இவை tube launched loitering munition என்னும் வகையைச் சேர்ந்தவை.

அமெரிக்காவின் Switchblade என்னும் ஆளிலிவானூர்திகளைப் போன்றவை. ஏற்கனவே அமெரிக்கா அறுநூற்றுக்கும் மேற்பட்ட Switchbladeகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.

Ghost Phoenix ஆளிலிகள் தொடர்ந்து பத்து மணித்தியாலங்கள் பறக்கக் கூடியன பத்து கிலோ மீட்டர் தொலவில் உள்ள ஆட்டிலெறிகளையும் தாங்கிகளையும் அழிக்கக் கூடியவை.

அமெரிக்கா தனது தனியார் படைத்துறை உற்பத்தியாளர்களுக்கு அவசரமாக உக்ரேன் களமுனைக்கு ஏற்ப படைக்கலன்களை உருவாக்கும் வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

இரசியாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடையலாம்

சுலோவாக்கியா தன்னிடமுள்ள பதினான்ங்கு மிக்-29 போர் விமானங்களையும் உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

உக்ரேனிடம் உதிரிப்பாகங்கள் இன்றி செயற்படாமல் இருந்த போர் விமானங்கள் தற்போது செயற்படக் கூடிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனாலும் உக்ரேனிடம் வலிமை மிக்க வான் படை இல்லை என்பதுதான உண்மை. இரசியாவின் முதன்மை கப்பலான Moskovaவை உக்ரேன் தனது சொந்த தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் மூழ்கடித்தது.

அதனை இடமறிதலில் துருக்கியின் TB-2ஆளிலிகள் முக்கிய பங்கு வகித்தன. இனிவரும் காலங்களில் அந்த ஏவுகணைகள் இரசியாவிற்குள் சென்று தாக்கலாம்.

ஏற்கனவே உக்ரேனின் உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி அங்குள்ள எரிபொருள் குதங்களை அழித்துள்ளன.

2022 ஏப்ரல் 25-ம் திகதி இரசிய உக்ரேன் எல்லையில் இருந்து 154கிமீ தொலைவில் இரசியாவிற்குள் உள்ள எரிபொருள் குதம் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது.

இவை போன்ற பல நிகழ்வுகள் இனி இரசிய நிலப்பரப்பில் நடக்கலாம். இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை தேர்வுக்கு உட்படுத்தப்படலாம்.

இரசியாவின் எதியோப்பியாவிற்கான தூதுவரகத்தில் இரசியாவின் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு விடுத்ததும் அங்கு நீண்ட வரிசையில் இளையோர் திரண்டனர் எனவும் செய்திகள் வந்திருந்தன.

ஜோர்ஜியா, இரசியாவின் தூரகிழக்கு பிரதேசம் ஆகியவற்றில் இருந்து பல இரசியப் படையினர் உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

டொன்பாஸ் போரின் ஆரம்பத்தில் Kharkhiv நகரம் உட்பட 42 கிராமங்களை இரசியா இலகுவாக கைப்பற்றியது. ஏற்கனவே இரசியா Mariupol, Kherson ஆகிய இரு மூக்கிய நகரங்களை இரசியா கைப்ப்ற்றியுள்ளது.

அமெரிக்காவின் செய்மதிகளின் உளவு, வேவு, கண்காணிப்பு உக்ரேனுக்கு நல்ல பயன்களைக் கொடுக்கின்றன.

ஆனால் கேந்திரோபாயப் படைக்கலன்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்காமல் இரசியாவை உக்ரேனால் வெற்றி கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா அறியும். உக்ரேனை வெற்றி கொள்ள வைப்பதிலும் பார்க்க ஒரு நீண்ட போரையே அமெரிக்கா விரும்புகின்றது.

2022 மே மாதம் உக்ரேன் போரின் திசையை முடிவு செய்யும் மாதமாக இருக்கும்.

-வேல்தர்மா-

Share.
Leave A Reply

Exit mobile version