நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

 

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளுக்கிடையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கொள்கை ரீதியில் இணங்குவதாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இது தொடர்பில் இன்று காலை 10.30 க்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து நேற்றைய தினம் 11 கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடின.

இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன் மற்றும் ஷாந்த பண்டார ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் தாம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று காலை அறிவித்தது. எவ்வாறிருப்பினும் ஏனைய கட்சிகளுடன் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இறுதி நேரத்தில் சுதந்திர கட்சி அதனை தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அறிவித்தது.

ஜனாதிபதியை சந்தித்து தமது நிலைப்பாடு தொடர்பில் நேரடியாக தெரியப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சு.க. சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனித்து கலந்துரையாட வேண்டும் என்பதால் தமக்கு பிரிதொரு நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சு.க. உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மீது கட்சி தலைவர்களிடத்தில் கடும் அதிருப்தி காணப்படுகிறது.

வ்வாறிருப்பினும் எமது பிரச்சினைகளை ஒரு புறம் தள்ளி , நாட்டின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version