திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது

இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது அலுவலக கதவுகளை காவல்துறையினர் மூடியதாகவும் தங்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாகவும் தங்கமணியின் உறவினர்கள் கூறுகின்றனர்.
திருவண்ணாமலை – போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணைக்கு பிறகு தங்கமணி மரணம் அடைந்ததால் குற்றவியல் நடுவர் பாக்கியராஜ் அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

பிறகு அவரது முன்னிலையில் தங்கமணியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளிவரும்வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறு இழைத்தவர்கள் கைது செய்யப்படும் வரை

தவறிழைத்தவர்கள் கைது செய்யப்படும் வரை நிச்சயம் என் தந்தையின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என உயிரிழந்த தங்கமணியின் மகன் தினகரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

“மலைக்குறவர் சமூகம் என்பதனால் வலுக்கட்டாயமாக எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி வழக்கை ஒப்புக்கொள்ள வைப்பார்கள் எங்கள் கிராமத்திலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுவரை 4 பேர் காவல்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கிறார்கள் எனது தந்தை ஐந்தாவது நபர்.

என் தந்தைக்கு இதற்கு முன்பு இது மாதிரியான உடல் ரீதியான பிரச்சனை எதுவும் வந்தது கிடையாது. அப்படி இருக்க விசாரணைக்காக அழைத்துச் சென்ற இடத்தில் திடீரென இப்படி வலிப்பு வரும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

“2 லட்சம் லஞ்சம் கேட்ட போலீசார்”

மேலும் அவர், “எனது தந்தையை விசாரணைக்கு அழைத்துச் சென்ற பிறகு அவரை விடுவிப்பதற்கு என்னிடம் கலால் காவல்துறையினர் 2 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

அதன் பிறகு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்று பேரம் பேசி இறுதியாக ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள்.

விசாரணைக்கு அழைத்து சென்ற என் தந்தையை கிளை சிறைச்சாலையில் அடைப்பதற்கு முன்பு அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்த போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

திடகாத்திரமாகதான் இருக்கிறார் இந்த அடிப்படையில்தான் சிறையில் அடைத்தார்கள். அப்படி இருக்கும்பொழுது திடீரென என் தந்தைக்கு எப்படி வலிப்பு வரும்? மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? இவர்களை எங்களால் நம்ப முடியவில்லை?”, என்றார்.

உயிரிழந்த தங்கமணி

“3 லட்சத்தில் தொடங்கி படிப்படியாக 7 லட்சம் ரூபாய் வரை பேரம்”

“என் தந்தையை விடுவிப்பதற்கு முதலில் எங்களிடம் பணம் கேட்டார்கள் எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை என கூறினோம்.

அதன் காரணமாக என் தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டார்கள். இப்போது, காவல்துறையினர் எங்களை தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வந்து எங்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் அங்கே வந்து விடுகிறார்கள்.

மூன்று லட்ச ரூபாயில் தொடங்கி, படிப்படியாக 7 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கித் தருவதாகவும், வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு சமாதானமாகப் போகுமாறும் தெரிவிக்கின்றனர்.

தேவை இல்லாமல் எங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மறைமுகமாக மிரட்டுகிறார்கள்” என்றார்.

திருவண்ணாமலை – போலீஸ் விசாரணை

மேலும் என் தந்தை இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை எனது தந்தையின் உடலை நாங்கள் பெற்றுக் கொள்வது இல்லை என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறோம் என்றார் அவர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பவுன்குமார் ரெட்டி ஆகியோர் உயிரிழந்த தங்கமணி வீட்டிற்கு நேரில் சென்று நேரடியாக தங்கமணியின் உறவினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர்.

“அப்போது உங்களுடைய டிமாண்ட் என்ன என்று கேட்டார்கள். அதன் பின்னர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கும்போது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய நிவாரணம் கிடைக்க உதவி செய்கிறோம். மேலும் அரசுப் பணி கிடைப்பதற்கும் உதவி செய்கிறோம் என்று கூறினர்,” என்கிறார் தினகரன்.

அவர் மீது 18 வழக்கு உள்ளது என்கிறார் டிஐஜி

வேலூர் சரக காவல் துறை தலைவர் அனி விஜயா

தங்கமணி மீது ஏற்கனவே 18 வழக்குகள் உள்ளன, வழக்கை வாபஸ் வாங்க அவரது மகன் தினகரனிடம் போலீசார் பேரம் பேசவில்லை அதற்கு அவசியமில்லை என்கிறார் வேலூர் சரக ஆனி விஜயா. மேலும் அவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;

“26ம் தேதி தங்கமணியிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கும்போது அவருக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல்தான் இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீரான பிறகு அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கொடுத்து அதன் பிறகுதான் சிறைச்சாலையில் அடைத்தனர்.

மறுநாள் 27ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் திடீரென வலிப்பு வந்துள்ளது.

உடனடியாக சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த போதுதான் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மேலும் தங்கமணியின் மகன் தினகரன் போலீசார் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள பேரம் பேசியதாக கூறுவதில் உண்மை இல்லை.

போலீசார் அவ்வாறு பேச வேண்டிய அவசியமில்லை. தங்கமணிக்கு இதற்கு முன்பே உடலில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version