யாராவது பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று விமர்சிக்கவேண்டுமென்றால், அவர்களை ‘கோயபல்ஸ்’ என்று திட்டுவதை அரசியல் விவாதங்களில் கேட்டிருக்கலாம். ஹிட்லருக்கு மிக நெருக்கமான பிரசார அமைச்சர்தான் இந்த கோயபல்ஸ்.
‘ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாகிவிடும்’ என்று கோயபல்ஸ் கூறியதாக மேற்கோள் காட்டப்படும் வாசகம் மிகப் பிரபலம்.
60 லட்சம் பேரை வதை முகாம்களில் கொன்றதாக வரலாற்றில் அறியப்படும் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவரும், அவரது நாஜி கட்சியின் பிரசாரப் பிரிவின் தலைவராகவும் இருந்தவருமான கோயபல்சின் வாழ்க்கையும் ஹிட்லரைப் போலவே தற்கொலையில்தான் முடிந்தது.
ஆனால், அவர் மட்டும் தனியாக அல்ல அவரது மனைவியோடும், ஆறு குழந்தைகளோடும்.
வரலாற்றில் பொய்ப் பிரசாரங்களுக்காகவே அறியப்படும் கோயபல்ஸ் வாழ்க்கையின் முடிவு எப்படி அமைந்தது?
கோயபல்சின் முக வாட்டம்
ஹிட்லரின் மரணம் குறித்த செய்தி, அவர் இறந்த மறுநாள் மே 1 ஆம் தேதி இரவு 10:26 மணிக்கு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அன்று பிற்பகல் ரைஷ் சான்சலரியில் சோவியத் வீரர்களுடன் சண்டையிட்டபோது ஹிட்லர் கொல்லப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது கடைசி மூச்சு வரை சோவியத் வீரர்களுடன் போராடினார் என்று கூறப்பட்டது.
1945 ஏப்ரல் 30 ஆம் தேதி, அதிபர் மாளிகையின் தோட்டத்தில் ஹிட்லரின் உடல் முழுவதுமாக எரிக்கப்படக்கூட இல்லை.
அந்த நேரத்திலேயே அவருடன் இருப்பவர்கள், நெருங்கி வரும் சோவியத் ராணுவத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.
அவர்கள் சோவியத் ராணுவத்தின் ஜெனரல் மார்ஷல் ஜுகோவை சந்திக்க ஜெனரல் கிரெப்ஸை தங்கள் பிரதிநிதியாக அனுப்பினர்.
இயன் கெர்ஷா ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றில் , “ஜெனரல் கிரெப்ஸை அனுப்பியதன் நன்மை என்னவென்றால், அவர் முன்னர் மாஸ்கோவில் ஜெர்மன் தூதரகத்தில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர்.
அவர் ரஷ்ய மொழி பேசத் தெரிந்தவர். கிரெப்ஸ், இரவு 10 மணிக்கு, கோயபேல்ஸ் மற்றும் போர்மானின் கடிதம் மற்றும் வெள்ளைக் கொடியுடன் சோவியத் முகாமுக்குச் சென்றார்.
காலை 6 மணிக்கு திரும்பிய அவர், நிபந்தனையின்றி சரணடைய சோவியத் ராணுவம் வலியுறுத்துவதாகவும், மே 1 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அதைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கேட்டதும், கோயபல்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளின் முகங்கள் தொங்கிப்போய்விட்டன. அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கினர்.
கோயபேல்ஸின் மனைவி தங்கள் ஆறு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார்
ஆனால் ஹிட்லருக்கு நெருக்கமான கோயபல்ஸ், தானும் ஹிட்லரைப் போலவே இறக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.
முதல் நாள், அதாவது ஏப்ரல் 30 அன்று, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு, கோயபல்ஸ் மனைவி மாக்தா கோயபல்ஸ், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தன் முதல் திருமணத்தில் பிறந்த மகனுக்கு கடிதம் அனுப்பினார்.
குழந்தைகளின் முடிவு
மே 1 ஆம் தேதி மாலை, மருத்துவர் ஹெல்மட் குஸ்டாவ் குன்ஸ், நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட கோயபல்ஸின் ஆறு குழந்தைகளான ஹெல்கா, ஹில்டா, ஹெல்மட், ஹோல்டே, ஹெடா மற்றும் ஹிடே ஆகியோருக்கு தூக்கத்தை வரவழைக்க மார்ஃபின் ஊசி மருந்தை செலுத்தினார்.
ஜோகிம் ஃபேஸ்ட் தனது ‘இன்சைட் ஹிட்லர்ஸ் பங்கர்’ என்ற புத்தகத்தில், “இதற்குப் பிறகு, ஹிட்லரின் தனிப்பட்ட மருத்துவர் லுட்விக் ஸ்டம்ப்ஃபெகர் முன்னிலையில் யாரோ ஒருவர் இந்தக் குழந்தைகளின் வாயைத் திறந்தார்.
மாக்தா சில துளிகள் ஹைட்ரஜன் சயனைடை குழந்தைகளின் தொண்டையில் இறக்கினார். அவர்களின் மூத்த மகள் ஹெல்கா மட்டுமே. இதை எதிர்த்து போராடினார்.
இந்த 12 வயது சிறுமியின் உடலில் உள்ள கீறல்களில் இருந்து அவர் இவ்வாறு விஷம் கொடுக்கப்படுவதை எதிர்த்துள்ளார் என்று ஊகிக்க முடிகிறது.
குழந்தைகள் அனைவரும் ஒரு நொடியில் இறந்துவிட்டனர். இதற்கு பிறகு மாக்தா கோயபல்ஸ் தங்கள் பதுங்கு குழியை அடைந்த போது, அவருடைய கணவர் அங்கு காத்திருந்தார்.
அவரிடம் ‘வேலை முடிந்தது’ என்று மூன்று வார்த்தைகள் மட்டுமே மாக்தா சொன்னார். அதன் பிறகு மாக்தா கதறி அழ ஆரம்பித்தார்,” என்று எழுதியுள்ளார்.
இரவு எட்டு முப்பது மணியளவில், கோயபல்ஸ் ஒன்றும் பேசாமல் திடீரென தனது தொப்பியையும் கையுறையையும் அணிந்து கொண்டார்.
அவரும்,மனைவியும் பதுங்கு குழியின் படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு ஹிட்லர் கொடுத்த கட்சியின் கோல்டன் பேட்ஜை மாக்தா அணிந்திருந்தார்.
சோவியத் படையினரிடம் சிக்கிய எரியாத உடல்கள்
படியில் ஏறிய கோயபல்ஸ் தனது டெலிபோன் ஆபரேட்டரான ரோஹஸ் மிஷிடம், “நீங்கள் இனி தேவையில்லை” என்றார்.
ரிச்சர்ட் ஜே. எவன்ஸ் தனது ‘தி தேர்ட் ரைஷ் அட் வார்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “பங்கரை விட்டு வெளியேறும் முன், கோயபல்ஸ் தம்பதி சிறிதே நின்று சயனைடு காப்ஸ்யூலை மென்று தின்றார்கள்.
சில நொடிகளில் இறந்து போனார்கள். ஒரு SS வீரர் அவர்கள் இறந்துவிட்டதை உறுதி செய்ய இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். இதற்குப் பிறகு அவர்களது உடல்கள் எரிக்கப்பட்டன.”
கோயபல்ஸ் ஜோடி
கோயபல்ஸ் ஜோடி
ஹிட்லரையும் ஈவா பிரெளனையும் எரித்த பிறகு, மிகக்குறைவான பெட்ரோலே மிச்சம் இருந்தது.
எனவே கோயபல்ஸ் மற்றும் மாக்தாவின் உடல்கள் முழுமையாக எரியவில்லை. அடுத்த நாள் சோவியத் வீரர்கள் அதிபர் மாளிகைக்கு வந்தபோது, அந்த உடல்களை அவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொண்டனர்.
சோவியத் வீரர்கள் ரைஷ் சான்சலரியில் நுழைந்தபோது, ஜெனரல் பெர்க்டார்ஃப் மற்றும் ஜெனரல் கிரெப்ஸ் ஒரு மேஜையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.
அவர்கள் முன் பாதி காலியான மதுபாட்டில்கள் கிடந்தன. அவர்களும் உயிருடன் இருக்கவில்லை. முன்னதாக பதுங்கு குழியில் இருந்த எல்லா முக்கிய கோப்புகளும் எரிக்கப்பட்டன.
SS வீரர்கள் வேறு எங்கிருந்தோ பெட்ரோலை கொண்டுவந்து ஹிட்லரின் படிக்கும் அறைக்கு தீ வைத்தனர். ஆனால் காற்றோட்ட அமைப்பு அணைக்கப்பட்டதால் தீ அதிகம் பரவாமல் அறைகலன்கள் மட்டுமே எரிந்து சாம்பலாயின.
ஹிட்லரின் பதுங்கு குழியின் உள் தோற்றம்
கோரிங்கும் விஷ மாத்திரை சாப்பிட்டார்
இரவு 11 மணியளவில், பதுங்கு குழியில் வசித்த மற்றவர்கள் வெளியேறி, எப்படியோ நிலத்தடி ரயில் நிலையமான ஃப்ரீட்ரிக்ஸ்ட்ராஸை அடைந்தனர். அவர்களைச் சுற்றிலும் அழிவின் தாண்டவம் காணப்பட்டது. சோவியத் குண்டுகள் எல்லா இடங்களிலும் விழுந்தவண்ணம் இருந்தன.
“ஹிட்லரின் வேறு இரண்டு கூட்டாளிகள் போர்மன் மற்றும் ஸ்டம்ப்ஃபெகர், எப்படியோ இன்வாலிட்ஸ்ட்ராஸை அடைந்தனர்.
ஆனால் அங்கு சோவியத் செம்படையைப் பார்த்ததும்,தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க நஞ்சு அருந்தினர்.
தங்கள் மீது வழக்கு தொடரப்படும், பகிரங்கமாக கண்டனம் எழும், தங்கள் உடல்கள் அவமானப்படுத்தப்படும் என்று ஹிட்லரைப் போலவே, அவரது தோழர்கள் பலரும் அஞ்சினர்,” என ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றில் இசான் கர்ஷா குறிப்பிட்டுள்ளார்.
1945 மே 9 ஆம் தேதி ஹிட்லரின் மற்றொரு கூட்டாளியான ஹெர்மன் கோரிங்கின் பவேரியா இல்லத்திற்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்தபோது, அவர் சரணடைந்துவிட்டார்.
நாஜி ஆட்சியில் ஜெர்மனி
“தோற்கடிக்கப்பட்ட ஆட்சியில் தன்னை ஒரு முக்கிய நபராக அமெரிக்கர்கள் கருதுவார்கள் என்றும், சரணடைவதற்கான விதிமுறைகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்த தன்னை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் கருதினார்.
அமெரிக்கத் தளபதி அவருடன் கைகுலுக்கி, சாப்பிட உணவு கொடுத்தார். இதை அறிந்த அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் உடனடியாக கோரிங்கை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
அவரது போதைப் பழக்கம் நிறுத்தப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது,”என்று ரிச்சர்ட் ஜே. எவன்ஸ் எழுதியுள்ளார்.
கோரிங்கிற்கு தான் செய்த செயல்களுக்கு எந்த வருத்தமும் இருக்கவில்லை. அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக, துப்பாக்கிச் படையினரால் தான் கொல்லப்பட வேண்டும் என்று கோரிங் கோரினார்.
அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும், அவர் ஒரு காவலாளி உதவியுடன் விஷக் மாத்திரையைப் பெற்று 1946 அக்டோபர் 15 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
ஹிம்லரும் தற்கொலை செய்து கொண்டார்
ஹென்ரிக் ஹிம்லருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அவர் எப்படியோ எல்பே நதியைக் கடந்தார். ஆனால் அவர் பிரிட்டிஷ் வீரர்களிடம் சிக்கினார்.
அப்போது ஹிம்லர் மிகவும் அழுக்கான ஆடைகளை அணிந்திருந்தார். ஆட்டம் முடியப் போகிறது என்று உணர்ந்ததும் கண்களில் இருந்த patch ஐ கழற்றி கண்ணாடி போட்டுக் கொண்டார். அவரை சோதனையிட்டபோது, அவரிடம் இருந்து ஒரு சிறிய விஷக்குடுவை கிடைத்தது.
இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அதிகாரி அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
“மருத்துவர் ஹிம்லரிடம் வாயைத் திறக்கும்படி கட்டளையிட்டபோது, அவரது பற்களுக்கு இடையில் ஒரு கருப்புப் பொருளைக் கண்டார்.
அவர் தலையை வெளிச்சத்தின் பக்கம் திருப்பியபோது, ஹிம்லர் விரைவாக தனது பற்களால் அந்த கருப்புப்பொருளை கடித்துவிட்டார்.
அவர் கடித்தது க்ளாஸ் சயனைடு கேப்சியூல். சில வினாடிகளில் அவர் இறந்தார். அப்போது அவருக்கு 44 வயதுதான்,”என்று ரிச்சர்ட் ஜே. எவன்ஸ் எழுதியுள்ளார்.
பெர்லினில் திடீரென்று அதிகரித்த தற்கொலைகளின் எண்ணிக்கை
அவரைத்தொடர்ந்து, மற்றொரு SS அதிகாரியான ஓடிலோ குளோபோக்னிக் என்பவரும் நஞ்சு அருந்தினார்.
எர்ன்ஸ்ட் கிராவிட்ஸ் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கையெறிகுண்டு மூலம் வெடிக்கச் செய்தார்.
மற்றொரு SS அதிகாரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் கருணைக்கொலையை ஏற்பாடு செய்தவருமான ஃபிலிப் போலர், 1945 , மே 19 அன்று தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
ரைஷ் சுப்ரீம் கோர்ட்டின் தலைவரான அர்வின் பும்கேனும் தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லரின் தலைமை ராணுவ
அதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் வால்டர் மொடேல், ஆயுதங்களைக் கீழே போடும் அவமானத்தைத் தவிர்ப்பதற்காக , டுசெல்டார்ஃப் அருகே உள்ள காடுகளில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
ருடால்ஃப் ஹெஸ்ஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை தனிமை சிறையில் கழித்தார். 1987ல், தனது 93வது வயதில், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிறிஸ்டியன் கோஸ்சேல் தனது ‘ Suicide at the end of the third Reich’ புத்தகத்தில் ,”அரசு புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதத்தில் பெர்லினில் 238 தற்கொலைகள் நடந்தன.
இது ஏப்ரலில் 3,881 ஆக அதிகரித்தது. பெரும்பாலான தற்கொலைக் குறிப்புகள் அப்போதைய சூழ்நிலைகளையும் சோவியத் தாக்குதலையும் குறிப்பிடுகின்றன.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொன்ற பிறகு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்,” என்று எழுதுகிறார்.
ஒரு சோவியத் வீரரின் கையில் ஹிட்லர் சிலையின் உடைந்த தலை
அர்ஜென்டினாவில் இஸ்ரேலிய உளவாளிகளிடம் சிக்கிய ஐஷ்மான்
ஜெர்மன் தொழிலாளர் முன்னணியின் தலைவர் ராபர்ட் லே, டிரோல் மலைகளில் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டார்.
அவர் 1945 அக்டோபர் 24 அன்று நியூரம்பெர்க்கில் உள்ள சிறையின் கழிப்பறையில் தனது கைகளால் தனது கழுத்தை நெரித்துக் கொண்டார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜோவாகிம் ரிப்பேன்ட்ராஃப் மற்றும் ஹிட்லரின் தலைமை ராணுவ ஆலோசகர் ஆல்பிரட் ஜோடியும்,1946 அக்டோபர் 16 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். வெகு சிலரே அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மற்றொரு போர்க்குற்றவாளி அடால்ஃப் ஐஷ்மான் போலி அடையாள அட்டைகளின் உதவியுடன் தலைமறைவானார்.
அவர் அர்ஜென்டினாவை அடைந்தார். அங்கு ஜுவான் பெரோவின் அரசு, பல நாஜி மற்றும் SS வீரர்களுக்கு அடைக்கலம் அளித்தது.
1960 மே மாதம், ஜெர்மன் யூதரான ஃபிரிட்ஸ் பேர் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பிறகு ஐஷ்மான், இஸ்ரேலிய உளவாளிகளால் அர்ஜென்டினாவிலிருந்து கடத்தப்பட்டார்.
அவர் ஜெருசலேமுக்கு அழைத்து வரப்பட்டு அவர் மீது இனப்படுகொலை குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1962 மே 31 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
சோவியத் பெண் வீரர்கள் ஈவா ப்ரெளனின் ஆடைகளை எடுத்தனர்
ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு சண்டையை நிறுத்த உத்தரவு இருந்தபோதிலும், மே 2 மற்றும் அதற்கு அடுத்த நாளும் பெர்லின் பகுதிகளில் சண்டை தொடர்ந்தது.
மே 2 அன்று, பதுங்கு குழியில் இருந்த தலைமைப் பொறியாளர் ஜோஹன்னஸ் ஹென்செல், பதுங்கு குழியில் இணைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் இருந்து சில பெண்களின் குரல்களைக் கேட்டார்.
சிறிது நேரத்தில் ரஷ்ய சீருடையில் 12 பெண்கள் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வருவதைக் கண்டார். அவர்கள் செம்படையின் மருத்துவப் படைப் பிரிவில் உறுப்பினர்கள்.
ஜோகிம் ஃபியஸ்ட் தனது “இன்சைட் ஹிட்லர்ஸ் பங்கர்’ என்ற புத்தகத்தில், “அந்த பெண்கள் குழுவின் தலைவர் ஹென்செலிடம் ஹிட்லர் எங்கே? என்று ஜெர்மன் மொழியில் கேட்டார்.
அடுத்த கேள்வி ஹிட்லரின் மனைவியைப் பற்றியது. தன்னை ஈவா பிரெளனின் அறைக்கு அழைத்துச் செல்லும்படி ஹென்செலிடம் அவர் கூறினார்.
அங்கு சென்றதும் அந்தப்பெண்கள் ஈவாவின் அலமாரியை திறந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில், பயன்படுத்தக்கூடிய பொருட்களை அடைத்துக்கொண்டனர். அறையை விட்டு வெளியே வந்தபோது, அவர்களிடம் ஈவா பிரெளனின் உள்ளாடைகள் இருந்தன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் தொடங்கிய போரில் 5 கோடி பேர் இறந்தனர்
1945 மே 2 ஆம் தேதி, பெர்லினில் ஜெர்மன் தளபதிகள் தங்கள் வீரர்களிடம் ஆயுதங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு தங்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்டார் என்று கூறி அதை அவர்கள் நியாயப்படுத்தினர்.
Heinrich Breloer தனது ‘Geheim Umwet’ புத்தகத்தில் “ஜெர்மனியில் ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு துக்கம் அனுசரிக்கும் காட்சிகள் காணப்படவில்லை.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் மரணமடைந்தபோது ரஷ்யர்கள் அழுதது போல் எந்த ஜெர்மானியர்களும் அழுவதைக் காணமுடியவில்லை.
சில பள்ளிகளில் காலை பிரார்த்தனையின் போது ஹிட்லரின் மரணம் பற்றிய அறிவிப்புக்குப் பிறகு சில மாணவர்களின் கண்களில் கண்ணீர் காணப்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் மரணம் குறித்து வெளியான செய்தி
5 கோடி மக்களின் உயிரைப் பறித்த போரை ஹிட்லர் தொடங்கினார். பெர்லினைக் கைப்பற்றுவதில் மட்டும் சோவியத் யூனியன் தனது 3 லட்சம் வீரர்களை இழந்தது.
சுமார் 40,000 ஜெர்மன் வீரர்களும் கொல்லப்பட்டனர் . 5 லட்சம் ஜெர்மன் வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
1945 மே 2 ஆம் தேதி 3 மணியளவில் சோவியத் துருப்புக்கள்,ரைஷ் சான்சலரிக்குள் நுழைந்தன. அவர்கள் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை.
ஹிட்லரின் பதுங்கு குழிக்குள் நுழைந்த முதல் சோவியத் வீரர் லெப்டினன்ட் இவான் கிளிமென்கோ ஆவார். அவரது துணிச்சலுக்காக அவருக்கு ‘சோவியத் யூனியனின் ஹீரோ’ விருது வழங்கப்பட்டது.