சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக ரூ1 கோடி நிதி உதவி வழங்கும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இலங்கை மக்களுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பான அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது.

எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார் முதல்வர்

இதனைத் தொடர்ந்து மற்றொரு அறிக்கையில், இலங்கை மக்களுக்காக திமுக சார்பில் ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்குவர் எனவும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Share.
Leave A Reply

Exit mobile version