இலங்கையில் பொலிஸ் காவலரண் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர்க் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் நேற்று இரவு (மே 5ம் தேதி) இரவு தொடங்கி இன்று அதிகாலை 1.30 மணி வரை இச்சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸ் காவலரணில் பணியில் இருந்த ஊர்க் காவல் படை உத்தியோகத்தர் பொதுமகன் ஒருவரை கடுமையாகத் தாக்கியதால், கோபங்கொண்ட பொமக்கள் ஊர்க் காவல் படையினர் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் வீதித் தடைக் காவலரணை தீ வைத்து எரித்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்திருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

இவர்களில் இமாமுதீன் (40) என்பவர் கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும், பாஹிர் (31) வயிற்றில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இதேவேளை, 6 பொலிஸாரும் ஊர் காவல் படை உத்தியோகத்தர்கள் மூவரும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபா தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஒருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொவிட் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் வீதிக் காவலரண் ஒன்றே – இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version