இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி மேற்கொள்ளப்படும் ஏற்பாடுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக மஹிந்த கூறியுள்ளார்.

இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் அரசு தீர்வு வழங்கத் தவறியதாகக் கூறி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களின் போது வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கோட்டாபயவும் மஹிந்தவும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று முதலில் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்து முக்கிய துறைகளுக்கு புதியவர்களையும் பழைய அமைச்சர்களுக்கு வேறு துறைகளையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் நடந்த மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்த வேளையில், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த ராஜிநாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது பதவி விலகல் அதிகாரபூர்வமானதாக கருதப்படும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version