கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு விசேட கூட்டம் இடம்பெற்றது.

“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்”  அலரி மாளிகை முன்பாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரிமாளிமைக்கு முன்னால் இடம்பெற்ற மைனா கோ கம வை அடித்து நெருக்கி தீயிட்டுக்கொளுத்தினர்.

இதன் பின்னர் காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள கோட்டா கோ கம பகுதிக்கு விரைந்த  அரச ஆதரவாளர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதுடன் கலக செயல்களில் ஈடுபட்டுவருவதுடன், காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை தகர்த்தெறிந்து தீயிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பொலிஸ் தடையை மீறி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கலவரம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version