இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்த முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் இன்று காலை 10 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன என காவல்துறையின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த கால பகுதியில் 88 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

துப்பாக்கி சூடு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு புறநகர் பகுதியான அங்கொடை பகுதியில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் சேதமாக்கப்பட்ட வாகனங்களை போலீஸார் எடுக்க சென்ற வேளையில், பொது மக்கள் வாகனங்களின் மீது தீ வைக்க முயற்சித்துள்ளதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இதையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீஸார் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

‘இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்லவில்லை’

இலங்கையிலிருந்து சில அரசியல் தலைவர்களும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வரும் செய்திகளில் இந்த உண்மையும் இல்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version