பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
திரிகோணமலை:
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதற்கிடையே, பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்த செய்தி உண்மையில்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது என்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக ராஜபக்சே இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.